சனி, 10 நவம்பர், 2012

<>பொறுமைக்குக் கிடைத்த பரிசு<>


ந்தக் கிராமத்தில் மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். காரணம், இரண்டு மூன்று ஆண்டுகளாக மழை பெய்யவில்லை; அதனால் அங்கு பஞ்சம். பசி பட்டினி என்று அந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

கிராமத்திலுள்ள பெரியவர்கள் தாங்கள் பட்டினி கிடந்து குழந்தைகளுக்கு ஒருவேளை எப்படியாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.  இனி அதற்கும் வழி இல்லை. காடுகளில் காய்ந்து போன கிழங்குகள் கூட கிடைப்பதில்லை.

ஊரில் பெரியவர்கள் கூடினர். குழந்தைகளைப் பட்டினியிலிருந்து எப்படி காப்பது? ஆலோசித்தனர்.  இறுதியாக அந்தக் கிராமப் பெரியவர் சொன்னார்.

பக்கத்துக் கிராமத்தில் வசதியான விவசாயி ஒருவர் இருக்கிறார்.  அவர் நிலத்தில் மட்டும் வற்றாத கிணறுகள் இருக்கிறது. அதனால் விவசாயம் செழிப்பாக நடக்கிறது.  அவரிடம் போய் உதவி கேட்போம். மறுக்காமல் செய்வார் என்று பெரியவர் சொன்னார்.

மறுநாள் கிராமப் பெரியவர்கள் சிலர் போய்  அடுத்த கிராம விவசாயியைச் சந்தித்தனர். அவர்கள் தங்கள் நிலையைச் சொன்னார்கள். அதைக் கேட்ட‌ விவசாயி மனமிரங்கினார்.

உடனடியாக உதவவும் செய்தார். ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மூடை நெல்லும் ஒரு மூடை சோளமும் கொடுத்தார்.  அந்தக் கிராமத்தில் எத்தனை சிறுவர் சிறுமியர் இருக்கிறார்கள் என்ற விபரத்தையும் கேட்டுக்கொண்டார்.

நாள்தோறும் மாலையில் அந்த விவசாயி அந்தக் கிராமத்துக்கு மாட்டுவண்டியில் வருவார். அவரது வேலையாள் ஒரு கூடையை பொது இடத்தில் வைப்பார்.

அந்தக் கிராமத்துச் சிறுவர்கள் சிறுமியர்களை அழைத்து அதிலிருக்கும் தின்பண்டங்களை எடுத்துக்கொள்ளச் செய்வார். எல்லோரும் கிடைக்காமல் போய்விடுமோ என்று அடித்துப் பிடித்து எடுத்துப் போனார்கள். ஒரேஒரு சிறுவன் மட்டும் ஓரமாக ஒதுங்கி நின்று கடைசியாக மீதமிருக்கும் ஒரு
தின்பண்டத்தை எடுத்துப் போவான்.

இதே போல ஒவ்வொரு நாளும் தின்பண்டம் கொண்டு வருவார். அந்தச் சிறுவன் பொறுமையாக நிற்பான். எல்லோரும் எடுத்துக்கொண்டு போன பிறகு மீதமுள்ள ஒரு தின்பண்டத்தை எடுத்துப் போவதை அந்த விவசாயி கவனித்தார்.

மறுநாளும் தின்பண்டங்கள் வந்தது. கூடவே சாக்கு மூட்டைகளில் பூசணிக்காய் கொண்டுவந்தார், விவசாயி. எல்லோரும் ஒரு பூசணிக்காய் எடுத்துப்போகும்படி விவசாயி சொன்னார். வழக்கம்போல சிறுவன் எல்லோரும் எடுத்துச் செல்லும் வரை காத்திருந்தான். ஆனால் கடைசியில் பூசணிக்காய் எதுவும் மிஞ்சவில்லை. சிறுவன் ஏமாற்றத்தோடு காலிச் சாக்குப் பையை பார்த்தான்.

அப்போது விவசாயி, அவனை அழைத்து வண்டியிலிருந்து ஒரு பூசணிக்காயை எடுத்துக் கொடுத்தார். சிறுவனும், "நன்றி அய்யா," என்று சொல்லி வாங்கிப் போனான். வீட்டுக்குப் போனதும், அம்மாவிடம் அந்தப் பூசணிக்காயைக் கொடுத்தான்.  அந்தப் பூசணிக் காயை சமைப்பதற்காக‌ உடைத்துப் பார்த்த போது அதிலிருந்து பொலபொலவென தங்கக்காசுகள் கொட்டியது.  அதைக்கண்டதும் அம்மாவும் பிள்ளையும் ஆச்சர்யப்பட்டார்கள்.

மகனை அழைத்து,"இதிலுள்ள பொற்காசுகளை, அந்த விவசாயி அய்யாவிடம் கொடுத்து வரும்படி அம்மா அனுப்பினாள்.  மகனும் அந்த விவசாயியைப் பார்த்து பொற்காசுகளைக் கொடுத்தான்.  "அய்யா, நீங்கள் கொடுத்த பூசணிக்காயில் இந்தத் தங்கக் காசுகள் இருந்தன.  இது உங்களுக்கு
உரியது என்று சொல்லிக் கொடுத்தான்.

ஏழையாக இருந்தாலும் அந்தச் சிறுவனின் குடும்பத்தின் நேர்மையை எண்ணி மகிழ்ந்தார்,விவசாயி. "தம்பி, அது உனக்காக நான் வைத்த பொற்காசுகள்தான்.

நீ, மற்றவர்களைப் போல இல்லாமல் பொறுமையாக இருந்து தின்பண்டத்தை எடுத்துச் சென்றதைக் கவனித்தேன். அது உன் பொறுமைக்குக் கிடைத்த‌பரிசு! நான் கொடுத்த பரிசு!!

இப்போது உன் நேர்மைக்கு இன்னும் ஒரு பரிசு தரப் போகிறேன். உன் படிப்புக்கு ஆகும் செலவை எல்லாம் நானேதரப்போகிறேன்.  சிறுவனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. வீட்டுக்குப் போய் தாயிடம் விவசாயி சொன்னதையெல்லாம் சொன்னான்.

நீதி:- பொறுமையாக இருந்தால் அதற்குரிய பரிசு கிடைக்கும்! நேர்மையாக இருந்தால் அதைவிடப் பெரிய பரிசு கிடைக்கும் என்று தெரிந்துகொண்டோமா?

- ஆல்பர்ட்,அமெரிக்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக