சனி, 10 நவம்பர், 2012

<>பகற்கனவு<>


ரு ஊரில் ஒரு அம்மாவும் பெண்ணும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு பசுமாடு தான் சொத்து.

அம்மா பால் கறந்து மகளிடம் கொடுப்பாள்; மகள் அதைக் கொண்டு போய் விற்றுவிட்டு வருவாள்.
பால் விற்றுவரும் காசில்தான் இருவரின் வாழ்க்கையும் நடக்கும்.

ஒரு நாள் பால் விற்பதற்காக மகள் சென்றாள். ஒற்றையடிப்பாதையில் நடந்து போய்க் கொண்டிருந்தவளுக்கு எதிரில் அவள் வயதை ஒத்த பெண்கள் வருவதைப் பார்த்தாள்.  அவர்கள் நல்ல உடை உடுத்தி இருந்தனர்.  நகைகள் அணிந்திருந்தனர். பணக்கார வீட்டுப் பெண்கள் என்று நினைத்துக்கொண்டாள்,இவள்.

திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை வந்தது.  இன்றைக்கு விற்கும் பால் காசில் கோழிக்குஞ்சுகள் வாங்கிக்கொண்டு வந்து வளர்க்க வேண்டும்; அந்தக் கோழிக்குஞ்சுகள் வளர்ந்து பெரிய கோழிகள் ஆனதும் அவைகளை விற்றுவிட்டு ஆட்டுக்குட்டிகள் வாங்கிவிட வேண்டும்.  அந்த ஆட்டுக் குட்டிகள் வளர்ந்து பெரிய ஆடுகளானதும் அவைகளை விற்று பசுமாடுகள் வாங்க வேண்டும்; அப்படியே நிறைய மாடுகள் ஆகி பால்பண்ணை வைத்துவிட வேண்டும்.

அப்போது இந்த ஊரிலேயே நாம் தான் பெரிய பணக்காரியாகிவிடுவோம். அய்..நினைக்கவே சந்தோசமாக‌ இருக்கிறதே என்று  துள்ளிக்குதித்தாள். கற்பனை சந்தோசத்தில் தலையிலிருந்த பால் குடத்தை மறந்துபோனாள்.  இவள் துள்ளிக் குதித்தவுடன் தலையில் இருந்த பால் குடம் கீழே விழுந்தது; அதிலிருந்த‌
பால் எல்லாம் பாழாய்ப் போனது.

அன்றைக்கு பால் விற்றுக் கிடைக்கும் காசும் போனது; அம்மாவிடம் அடியும் திட்டும்தான் அவளுக்கு கிடைத்தது. அவளின் அதிக கற்பனையால் உள்ளதும் போச்சு என்றானது.

நீதி:- செய்யும் செயலில் கவனம் இல்லாவிட்டால் இருப்பதும் போய் சிரமப்படும் நிலைதான் ஏற்படும்.

-ஆல்பர்ட், அமெரிக்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக