வெள்ளி, 4 செப்டம்பர், 2009

உணவு மழைத் தீவு 15 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு 15 :

"இவ‌ர் வ‌ந்து ஒரு செய்தியைச் சொல்கிறார். இந்த‌ நேர‌த்தில் ந‌ம‌க்கு இது ஒரு ந‌ல்ல‌ செய்தியாக‌த்தான் இருக்கிற‌து. ந‌ம் தீவுக்கு கிழ‌க்கே ஒரு க‌ப்ப‌ல் ந‌ங்கூர‌ம் பாய்ச்சி நின்றுகொண்டிருக்கிற‌தாம். என்னுடன் ஓரிருவர் வந்தால் அவர்களிடம் நாம் பறவைத்தீவு போக உத‌வி கேட்டுப்பார்க்கலாம்," என்றார் தீவு நிர்வாக‌ அதிகாரி.


எல்லோரின் முகங்களிலும் பிரகாசமான ஒளி தோன்றியது. அதில் ஒருவர்,"எனது விசைப் படகு க‌ட‌லுக்கு அருகில் தான் இருக்கிற‌து. அதில் உட‌னே போக‌லாம்" என்று சொல்ல‌ உற்சாக‌மாக‌ சில‌ர் தீவு நிர்வாக‌ அதிகாரியுட‌ன் கிள‌ம்பின‌ர்.





ப‌த்துபேர்க‌ளுட‌ன் விசைப்ப‌ட‌கு காற்றைக் கிழித்துக்கொண்டு க‌ட‌லில் விரைந்த‌து. விசைப்ப‌ட‌கின் உச்சியில் வெள்ளைக்கொடி காற்றில் ப‌ட‌ப‌ட‌த்துக்கொண்டிருந்த‌து.



கப்பலில் இருப்பவர்கள் கடற்கொள்ளையர்கள் வருகிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது அல்லவா? அதனால்தான் தீவு நிர்வாக அதிகாரி வெள்ளைக்கொடியைப் பறக்க ஏற்பாடு செய்திருந்தார்.



உணவு மழைத் தீவு விசைப்ப‌டகுகள் டீசல், பெட்ரோலில் ஓடுபவை அல்ல; காற்றைச் சுவாசித்து ஓடும் வகையில் தயாரிக்கப்பட்ட நவீனப் படகுகள். டீச‌ல் தீர்ந்துவிட்ட‌து; அத‌னால் ப‌ட‌கு ந‌டுவ‌ழியில் நின்றுவிட்ட‌து என்ற‌ பேச்செல்லாம் இல்லை.



அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சியில் எதுதான் சாத்திய‌ம் இல்லை?



க‌ல்லையும் க‌ல்லையும் உர‌சி தீப்பொறி உண்டாக்கிய‌ கால‌த்திலிருந்து எத்த‌னை எத்த‌னை வ‌ள‌ர்ச்சி? விய‌ப்பு.....விய‌ப்பாக‌த்தான் இருக்கிற‌து, ஒவ்வொன்றுமே!



படகு கப்பலை நெருங்க,நெருங்க க‌ப்ப‌ல் சிறிது சிறிதாக‌ பெரிதாகத் தெரிய‌ ஆர‌ம்பித்த‌து. தீவு அதிகாரி க‌ப்ப‌லில் உள்ள‌வ‌ர்களிட‌ம் எப்ப‌டி உத‌வி கேட்ப‌து? ம‌றுத்துவிட்டால‌ என்ன‌ செய்வ‌து? என்ற‌ ஆலோச‌னையில் ஈடுப‌ட்டு இருந்தார்.



தீவில் ஆயிர‌ம் வீடுக‌ள் என்றாலும் குழ‌ந்தைக‌ள் பெரிய‌வ‌ர்க‌ள் எல்லாம் சேர்த்து 4642 பேர்கள் இருக்கிறார்கள் என்று குடியிருப்புப் ப‌ட்டிய‌லைக் காண்பித்தார். ந‌ம்மிட‌ம் இருக்கும் ப‌ட‌குக‌ளோ 24தான்.



அதிக‌ப‌ட்ச‌ம் ப‌ட‌குக்கு 25 பேர்க‌ள் என்றாலும் கூட‌ சுமார் 500பேர்க‌ள் ம‌ட்டுமே போக‌ முடியும். க‌ப்ப‌ல் ச‌ர‌க்குக் க‌ப்ப‌ல் போல‌ இருக்கிற‌து. அப்ப‌டியே ந‌ம் நிலையை எண்ணி ஒத்துக்கொண்டாலும் நாலாயிர‌ம் பேரை ஏற்றிச்செல்ல‌ இய‌லுமா என்று தெரிய‌வில்லை, என்ற‌ நியாய‌மான‌ க‌வ‌லையை வெளிப்ப‌டுத்தினார் தீவு நிர்வாக‌ அதிகாரி.







அதே நேர‌த்தில் க‌ப்ப‌லிலிருந்து ஒலி ஒன்று கேட்க‌வே எல்லோரும் க‌ப்ப‌லைப் பார்க்க‌ க‌ப்ப‌ல் நின்ற‌ இட‌த்திலிருந்து மெல்ல‌ வேக‌ம் எடுத்துக் கிளம்பிய‌து.


எல்லோரும் அதிர்ச்சியோடு க‌ப்ப‌லைப் பார்த்த‌ன‌ர்.

இன்னும்பொழியும்.....!

உணவு மழைத் தீவு - 14 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 14 :

கதிரவன் மெல்ல தன் கதிர்களை இதமாகப் படரவிட்டிருந்த இளங்காலை நேரம்; எலோருக்குமான விடிவுகாலமாக அந்த விடியலை எண்ணினார்கள். வானத்தையே இதுவரை நம்பியிருந்த உணவு மழைத் தீவு மக்கள் இப்போது முதன்முறையாக உழைத்தால்தான் உணவு கிடைக்கும் என்ற நிலைக்கு வந்திருந்தனர். தாங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை;தாம் பெற்ற பிள்ளைகள் பசியாற ஏதாவது செய்தாகவேண்டும் என்ற கவலையில் இருந்தனர். பெரியவர்கள் சிலர் கூடிநின்று கடலில் மீன் பிடிக்க முடியுமா? என்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தீவின் நிர்வாக அதிகாரி அங்கே வந்து ஒரு செய்தியைச் சொன்னார். அது அவர்களுக்கு பசியாற்ற உதவும் செய்தியாக இருந்தது.










"நாமும் நம் பிள்ளைகளும் பசியாற‌ கடல் அன்னை ஒரு வழி காட்டியிருக்கிறாள். நம் தீவுக்கு வழக்கமாக இந்த நேரத்தில் முட்டையிடுவதற்காக வரும் கடல் ஆமைகள் வரத் துவங்கியுள்ளது. நம் தேவைக்கு கடல் ஆமைகளைக் கொண்டுவந்து சமைத்து எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவோம். அதன் இரத்தம் சமைக்கலாம்; கறியும் உணவாகும். இதைப் பொறுப்பெடுத்து சிலர் சேர்ந்து செய்யுங்கள். நம்மில் சிலர் கடலைக் கடந்து பறவைத் தீவை அடைய நம்மிடம் சேதம் ஆகாத படகுகள் இருக்கிறதா? இல்லையானால் தீவில் உள்ள மரங்களை வெட்டி தெப்பம் போலச் செய்து பயணப்பட முடியுமா என்று பார்ப்போம்"என்று தீவு அதிகாரி சொன்னதும் கவலைகளால் வாடியிருந்த முகங்கள் கொஞ்சம் மலரத் துவங்கியது.









தீவு மீண்டும் சுறுசுறுப்பானது; கடல் ஆமைகளைக் கொண்டுவர சிலர் சென்றனர். சிலர் கடல் ஆமையை வைத்து பொது இடத்தில் உணவு சமைக்க ஏற்பாடுகளில் மூழ்கினர்.

















இதே நேரத்தில் தீவு அதிகாரியுடன் படகுகளை ஒரு குழு சரிபார்த்துக் கொண்டிருந்தனர். பயன்படாது என்று பலபடகுகள் கழித்துக்கட்டப்பட்டது; தீவிலிருந்த வீடுகளில் கடைசியில் தேறியது 24 மோட்டார் படகுகள். சிறிது பழுது பார்த்தால் ஓடும் என்ற நிலையிலிருந்தது. தங்களிடம் உள்ள கருவிகளை வைத்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.















பசியில் வாடியிருந்த சின்னஞ்சிறிசுகளுக்கும், வேலைசெய்து களைத்துப்போயிருந்த‌ பெரியவர்களுக்கும் ஆமை இரத்தமும் கறியும் பரிமாறப்பட்டது. பசியின் கோரப்படியிலிருந்தவர்களுக்கு உணவு தேவாமிர்த‌மாக உள்ளே போனது. வாடிவதங்கிய பயிருக்கு கொஞ்சம் நீர் ஊற்றினால் கொஞ்ச நேரத்தில் எப்படி செழித்து எழுந்து நிற்குமோ அப்படி எல்லோரும் உயிர் ஊறிய உணர்வில் தெம்பாகக் காணப்பட்டனர்.













ஒரு பெரிய‌ ப‌டையே துரித‌மாக‌ ப‌ட‌குக‌ளை செப்ப‌னிடும் ப‌ணியில் ஈடுப‌ட்டிருந்த‌து. தீவின் நிர்வாக‌ அதிகாரியும் தீவின் முக்கிய‌பிர‌முக‌ர்க‌ளும் ப‌ற‌வைத் தீவைச் சென்ற‌டைவ‌து குறித்து விரிவான‌ ஆலோச‌னையில் ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர். அப்போது தீவைச் சேர்ந்த‌வ‌ர் அர‌க்க‌ப்ப‌ர‌க்க‌ ஓடிவ‌ந்தார். நேராக‌ தீவு அதிகாரியின் காதில் கிசுகிசுத்தார். சுற்றி இருந்த‌வ‌ர்க‌ளோ என்ன‌மோ ஏதோ என்று திகிலோடு நிர்வாக‌ அதிகாரியை நோக்கின‌ர்.

இன்னும்பொழியும்.....!

உணவு மழைத் தீவு - 13 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 13 :

பாதாள அறைகளில் தீவே குடியிருந்தது. எதிர் வரும் ஆபத்தைத் தவிர்க்க. ஆனால் அதுவே இப்போது ஆபத்தாகிவிட்டது. தீவுகளில் இருந்த வீடுகள், கடைகள், அலுவலகம் அனைத்தும் தரைமட்டமாகிவிட்டது. உணவுப் புயல் தீவை நாசமாக்கிவிட்டது.




பாதாள அறைகளில் இருந்து மக்கள் வெளியேற விடாமல் இடிந்து நொறுங்கி விழுந்த வீட்டுக்கூரைகள் விழுந்து மூடியதால் தீவுமக்கள் யாரும் வெளியேற இயலாமல் பாதாளச் சிறையிலடைக்கப்பட்டது போல ஆகிவிட்டது. எவ்வளவோ முயன்றும் யாரும் பாதாள அறையை திறந்து வெளியே வர இயலவில்லை.





அந்தத் தீவின் புதிய அதிகாரி எப்ப‌டியோ த‌ம‌து வீட்டின் பாதாள‌ அறையிலிருந்து த‌ப்பி வீட்டுக்கு வெளியே வந்தார். வீடே தரைமட்டமாகிக்கிடந்தது. தீவில் ஒரு ஜீவராசிகூட இல்லாமல் தான் மட்டும் இருப்பதைக் கண்டார். த‌ம் குடும்பத்தை பாதாள அறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார். பின் அருகிலிருந்த வீட்டு இடிபாடுகளுக்கிடையே சென்று பாதாள அறைக் கதவுகளை உடைத்து உள்ளிருந்தவர்களை வெளியே அழைத்துவந்தார். வெளியே வந்தவர்கள், மற்ற வீடுகளுக்குச் சென்று அந்த வீடுகளின் இடிபாடுகளுக்கிடையே பாதாள அறை வாசலைக் கண்டுபிடித்து உடைத்து உள்ளிருந்தவர்களை மீட்டனர். ஏறக்குறைய நான்கு அய்ந்து மணி நேரங்களுக்குப் பின்னர் அந்தத் தீவு மக்கள் உயிரோடு வெளி உலகத்துக்கு வந்திருந்தனர். தீவில் குள‌ம்போல் ஆங்காங்கே த‌க்காளிக‌ள் உடைந்தும், முழுதாக‌வும் மித‌ந்துகொண்டிருந்த‌து. சிறுவ‌ர்க‌ள் குதூக‌ல‌மாக‌ அந்த‌ த‌க்காளிச் சாறில் நீந்தி விளையாடின‌ர்.











பெரிய‌வ‌ர்க‌ளோ, அடுத்து என்ன‌ செய்வ‌து என்ற‌ திகைப்பில் முக‌ங்க‌ளில் க‌வ‌லைப‌டிய‌ பேசிக்கொண்டிருந்த‌ன‌ர். தீவின் நிர்வாக‌ அதிகாரி, "எந்த‌வித‌மான‌ மீட்புப் ப‌ணிக‌ளும் செய்ய‌வோ ம‌று சீர‌மைப்புச் செய்து குடிய‌ம‌ர்த்த‌வோ வ‌ழியில்லை. சில‌ நூறு மைல் த‌ள்ளியுள்ள‌ தீவுக்குச் சென்றுவிட்டால் நாம் அங்குள்ள‌ சூழ‌லுக்கு ஏற்ற‌வாறு பிழைக்க‌ வ‌ழி தேடிக்கொள்ள‌லாம்" என்று நிலைமையை விள‌க்கிச் சொன்ன‌போது ப‌ல‌ர் அதுதான் ச‌ரி, இந்த‌த் தீவு ந‌ம‌க்கு ஒத்துவ‌ராது என்று சொன்னார்க‌ள். சில‌ர் க‌ட‌ல் க‌ட‌ந்து நாம் எந்த‌ வ‌ச‌தியுமின்றி எப்ப‌டி அந்த‌த் தீவை அடைவ‌து என்று கேட்ட‌போது எல்லோருக்கும் என்ன‌ செய்வது? எப்படிப் போகமுடியும்? என்ற கேள்விகள் எழுந்த‌து.











"இன்று இர‌வை எல்லோரும் ந‌ம் பாதாள‌ அறையிலேயே க‌ழிப்போம். நாளைக் காலையில் வீட்டுக்கு ஒருவ‌ர் இதே இட‌த்தில் கூடி என்ன‌ செய்வ‌து? என்று யோசிப்போமே" என்று நிர்வாக அதிகாரி சொல்லக் கூட்ட‌ம் மெல்ல‌க் க‌லைந்த‌து. எதிர்கால‌ம் என்ன‌ ஆகுமோ? எப்ப‌டியாகுமோ என்ற‌ க‌வ‌லை எல்லோரின் முக‌ங்க‌ளிலும் தெரிந்த‌து. உண‌வும‌ழைத் தீவில் வான‌ம் உண‌வும‌ழை பொழிவ‌தை நிறுத்தியிருந்த‌து; அடுத்த‌ உண‌வு எப்போது பொழியும் என்று சொல்ல‌ தொலைக்காட்சி நிக‌ழ்வும் இல்லை.









உண‌வும‌ழைத் தீவில் உண‌வு இனிமேல் பொழியுமா? பொழியாதா என்ப‌தும் தெரியாது. பொழிந்தால் ப‌சியாற‌லாம்; பொழியாவிட்டால் எப்ப‌டிப் ப‌சியாற‌ முடியும்? குழ‌ந்தைக‌ளுக்கு என்ன‌ செய்வ‌து? பெரிய‌வ‌ர்க‌ள் க‌ண் முன்னே விரிந்த‌ இந்த‌க் கேள்விக‌ளுக்கு விடைதெரியாம‌ல் வெகு நேர‌ம் விழித்திருந்த‌ன‌ர். எப்போது தூங்கினார்க‌ள் என்ப‌து தெரியாது. உண‌வும‌ழைத் தீவில் இனி அடுத்து என்ன‌ என்ப‌தைத் தீர்மானிக்கும் அடுத்த‌ நாளும் புல‌ர்ந்த‌து.

இன்னும்பொழியும்.....!

உணவு மழைத் தீவு - 12 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 12 :

"வானிலை அறிக்கை வாசிப்பது வான தேவன். உணவு மழைத்தீவில் இதுவரை இல்லாத அளவில் உணவுப்புயல் வீசும். புயல் மணிக்கு 160 முதல் 175 மைல் வேகத்தில் வீசக்கூடும். உணவுப் பதார்த்தங்கள் சமைக்கப்பட்டோ, சமைக்கப்படாமலோ அப்படி அப்படியே தீவு முழுக்க விழும். பல மைல் வேகத்தில் இவை மின்னலைப் போல் விரைந்து தீவை நோக்கி வருவதால் தீவு மிகக் கடுமையான சேதத்துக்கு உள்ளாகும்.


பிற்பகல் 2:30-க்கு சூறாவளிக் காற்றோடு துவங்கும் உணவுப்புயல் தீவு வரலாற்றில் இது முதல் முறையாகத் தாக்குகுகிறது. ரொட்டிகளும், முட்டைகளுமாகத் துவங்கி தக்காளி, பூசணி போன்றவை அடுத்தடுத்து விழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



பூசணிக்காய் பூமியில் வந்து விழும் வேகம்தான் அதிகபட்ச சேதம் விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் குழு தெரிவிக்கிறது. இரவு 9 மணிவரை இந்த உணவுப் புயல் ஓய்வதும் பின்னர் தொடர்வதுமாக இருக்கும். எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் பாதாள அறைகளிலிருந்து வெளிவரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பாதாள அறையை விட்டு வெளியே வரலாம் என்ற அறிவிப்பு வரும்வரை யாரும் வெளியே வரவேண்டாம். வீட்டுக்கூரைகள் பலத்த சேதம் அடைய வாய்ப்பு இருப்பதால்

மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று தீவு நிர்வாக அதிகாரி கேட்டுக்கொள்கிறார். உண‌வுப் புய‌ல் ஓய்ந்த‌தும் தீவில் நிவார‌ண‌ப்ப‌ணிக‌ள் முழு வீச்சில் ந‌டைபெறும்.



பொதுமக்க‌ள் தீவை சுத்தப்படுத்தும் பணிக்கு தீவு நிர்வாகத்துக்கு ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது தீவு நிர்வாகம். இந்தப் புயல் உண்மையில் தீவு மக்களுக்கு ஒரு மிகப்பெரிய சோதனையான நேரமிது. அடுத்த‌ அறிவிப்பு வ‌ரும்வ‌ரை உங்க‌ளிட‌மிருந்து விடைபெறுவ‌து வான‌தேவ‌ன்.



செய்தி முடிந்து சிறிது நேரத்தில் பலத்த காற்று சூறாவளிபோல வீசியது. தொடர்ந்து வீடுகளின் மீது பாறாங்கல் விழுவதுபோல உரத்த சத்தத்தோடு விழுவதும் கூறை நொறுங்கும் சத்தமும் கேட்டவண்ணமிருந்தன. திடீரென்று மின்சாரம் தடைப்பட்டது. மக்கள் இருந்த பாதாள அறை கருங்கும்மென்று ஆகிவிட்டது. தயாராக இருந்த மெழுகுவர்த்திகளை கொளுத்திவைத்தனர். பெருத்த ஓசை தீவு எங்கும் கேட்டது. எல்லோரும் சிறை வைக்கப்பட்டது போல பாதாள அறைக்குள்ளேயே இருந்தனர்.

மின் தடை நீங்கவில்லை. எல்லோரும் தேவையென்றால் மெழுகுவர்த்தியைப் பொருத்திக்கொள்வோம். இல்லையென்றால் அணைத்து வைப்போம், என்று மெழுகுவர்த்தியை சேமித்துவைத்துக் கொண்டனர்.

வான‌மே இடிந்து வீட்டுமேல் விழுவ‌து போல‌ பெருத்த‌ ஓசைக‌ள் பாதாள‌ அறைக்குள்ளும் கேட்ட‌து. குழ‌ந்தைக‌ள் ந‌டுங்கின‌ர். பெற்றோர்க‌ள் குழ‌ந்தைக‌ளை அர‌வ‌ணைத்து பாதுகாப்பாய் இருந்தார்க‌ள். எப்ப‌டி இருந்தாலும் அவ‌ர்க‌ள் த‌லைமேல் ஏதோ விழுவ‌து போல‌ பெருஞ்ச‌த்த‌ம் பெரிய‌வ‌ர்க‌ளுக்கே அச்ச‌த்தைத் த‌ந்த‌து.



ம‌ணிக்க‌ண‌க்காய் ட‌ப்...ட‌மார்...டொம் என்ற‌ ச‌த்த‌ங்க‌ள் ந‌ள்ளிர‌வு வ‌ரை தொட‌ர்ந்த‌து. மின்சார‌ம் அறுப‌ட்டு மீள‌வும் வ‌ர‌வே இல்லை. குழ‌ந்தைக‌ள் தூங்கிவிட்டார்கள். ச‌த்த‌ம் ஓய்ந்து இருந்த‌ நேர‌த்தில் மெல்ல‌ மேலே போய் நில‌வ‌ர‌ம் எப்ப‌டி என்ப‌தை அறிந்து வ‌ர‌ பெரிய‌வ‌ர்க‌ள் மேலே போனார்க‌ள். தீவில் பாதாள‌ அறையிலிருந்த‌வ‌ர்க‌ள் எவ‌ருமே மேலே வ‌ர‌ முடிய‌வில்லை. அவ‌ர்க‌ளால் க‌த‌வைத் திற‌க்க‌ முடிய‌வில்லை. உயிரோடு புதைந்து கொண்டிருக்கிறோமோ என்ற‌ ப‌ய‌ம் அவ‌ர்க‌ள் முக‌த்தில் க‌ல‌வ‌ர‌த்தை விதைத்த‌து.



இன்னும்பொழியும்.....!

உணவு மழைத் தீவு - 11 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 11 :
"முன் எப்போதும் இல்லாத‌ அள‌வில் இன்று பிற்ப‌க‌லுக்கு மேல் உணவுப் புயல் வீசும். இத‌னால் தீவு ப‌ல‌த்த‌ சேத‌த்துக்கு உள்ளாக‌க்கூடும் என்று தெரிகிற‌து. பிற்ப‌க‌லுக்கு முன்பாக த‌ங்க‌ள் உண‌வுக‌ளைச் சேக‌ரித்துக்கொண்டு அடுத்த‌ அறிவிப்பு வ‌ரும் வ‌ரை பாதாள‌ அறைக‌ளில் த‌ங்கி இருக்க‌ வேண்டும் என்று கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். பொழியும் உண‌வுக‌ளில் முட்டைக‌ள், தோசை, இட்லிகள் சாதாரண அளவைப் போன்று பலமடங்கு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






த‌க்காளி போன்ற‌வை உடைந்து த‌க்காளிச் சாறாகக் கொட்டும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இது குறித்த‌ செய்திக‌ள் அடுத்த‌ 30 நிமிட‌ங்க‌ளில் விரிவாக‌ இட‌ம்பெறும் என்று அறிவிப்பாள‌ர் சொன்னார்.







செய்தியைக் கேட்ட‌ உண‌வு ம‌ழைத் தீவு ம‌க்க‌ள் மிகுந்த சோக‌த்துக்குள்ளாகின‌ர். ச‌மீப‌த்தில்தான் பெருத்த‌ சேத‌ம் ஏற்ப‌ட்டது.







அதிலிருந்து இன்னும் முழுமையாக விடுப‌டாத‌ நிலையில் மீண்டும் பெருத்த‌ சேத‌ம் என்ப‌தால் க‌வ‌லைகொண்ட‌ன‌ர். குழ‌ந்தைக‌ள் எல்லோரும் சோக‌ம‌ய‌மாய் திக‌ழ்ந்த‌ன‌ர். எப்போதாவ‌து பாதாள‌ அறையில் இருக்க‌ நேர்ந்தால் ப‌ர‌வாயில்லை. அடிக்க‌டி பாதாள‌ அறைக்கு வ‌ருவதை சிறார் விரும்பவில்லை. இருட்டறையில் அடைக்க‌ப்படுவதாக எண்ணினர். பெரிய‌வ‌ர்க‌ள் தொலைபேசியில் இந்த‌ உண‌வுப் புய‌லை எப்ப‌டிச் ச‌மாளிக்க‌ப்போகிறோம் என்று பேசிக்கொண்ட‌ன‌ர். சிலர்,"இந்த‌ உண‌வும‌ழைத் தீவை விட்டு வெளியேறும் கால‌ம் வ‌ந்து விட்டது என்று நினைக்கிறேன்" என்று பேசிக்கொண்ட‌ன‌ர்.







சில‌ர் இந்த‌ பூமியை விட்டு வேறு கிர‌க‌ம் எதுக்காவ‌து போக‌ முடிந்தால் ந‌ல்ல‌து என்று பேசிக்கொண்ட‌ன‌ர். உண‌வும‌ழைத் தீவைத் தாக்க‌ப் போகும் புய‌ல் எப்ப‌டிப்ப‌ட்டதாக‌ இருக்கும்? எவ‌ராவ‌து இதை த‌டுத்து நிறுத்தும் உபாய‌ம் க‌ண்டுபிடித்தால் என்ன‌? இப்ப‌டிப் ப‌ல‌வாறாக‌ப் பேசிக்கொண்டனர். ம‌க்க‌ள் அனைவரும் சோக‌ம‌ய‌மாயிருந்த‌ன‌ர். அப்போது தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை அடுத்த‌ சில‌ நொடிக‌ளில் ஆர‌ம்ப‌மாகும் என்ற அறிவிப்பு கேட்டது. எல்லோரும் தொலைக்காட்சிப் பெட்டியை நெருங்கி என்ன‌ சொல்ல‌ப் போகிறார் அறிவிப்பாள‌ர் என்ப‌தைக் கேட்க‌த் த‌யாரானார்க‌ள்.

இன்னும் பொழியும்....!

உணவு மழைத் தீவு - 10 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 10 :

உணவு மழைத்தீவு அடுத்த சில தினங்களில் வழக்கமான தீவாக மாறியிருந்தது. தீவு மக்களும் குழந்தைகளும் உற்சாகமாக உலா வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட உணவு மழைப் புயல் ஓய்ந்து உற்சாகமாக கடற்கரையோரங்களில் கூடி சந்தோசப் பொழுதுகளில் மூழ்கினர். உணவு மழைத்தீவில் அடுத்த மூன்று நாட்கள் நன்றி நவிலல் விழா! ஒவ்வொரு வருடமும் தங்களின் மூவேளை உணவை எந்தக் கட்டணமும் இல்லாமல் வழங்கும் வானத்திற்கு நன்றி கூறும் விழா! வானதேவனுக்கான விழாவாக‌ வானம் பார்த்து முதல் நாள் விழா! மூன்று வேளையும் தங்கள் உணவோடு தீவுத்திடலில் தீவு மக்கள் அனைவரும் கூடி பாட்டுப்பாடி வானதேவனுக்கு வணக்கம் செய்து உணவுண்பது வழக்கம்! இந்த வருடமும் தீவு மக்கள் கூடிக் கொண்டாடினர்.












இரண்டாவது நாள் தீவு மக்கள் அனைவரும் கடற்கரையில் கூடி பல்வேறு விளையாட்டு, படகு செலுத்தும் போட்டி என்று அமர்க்களமாகக் கொண்டாடினர்.மூன்றாவது நாள் குழந்தைகளை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகளை தீவின் மையத் திடலில் வழங்கினர். தீவின் நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தீவு நிர்வாக அதிகாரி ஒலிபெருக்கியில் புதிய நிர்வாக அதிகாரியாக வர விரும்புபவர்கள் மேடைக்கு வரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அறிவித்தார். நான் நீ என்று போட்டியிட ஒருவரும் இல்லை. ஒரே ஒருவர் மட்டும் மேடை ஏறி,"நான் தீவு நிர்வாக அதிகாரியாக வர விரும்புகிறேன்" என்றார். யாருக்காவ‌து ஆட்சேபனை உண்டா? என்று ப‌ழைய‌ நிர்வாக‌ அதிகாரி கேட்க‌, கூட்ட‌ம் இல்லையென்ற‌து. உட‌னே அவ‌ர் நாளை முத‌ல் தீவின் நிர்வாக அதிகாரியாக‌ ப‌த‌வி ஏற்பார் என்றார். ஒருமாலை இல்லை; வாழ்த்தி, பாராட்டிப் பேச ஒருவரும் இல்லை. கர ஒலி மட்டுமே எழுப்பினார்கள். அவ்வளவுதான். தீவின் தேசிய கீதமிசைக்க மூன்றுநாள் விழா முடிவுக்கு வந்தது. கூடிய கூட்டம் மெல்ல, மெல்ல கலையத்துவங்கியது. தீவு மக்கள் தங்கள் இரவு உணவைச் சுவைத்துக்கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தனர். திடீரென்று திரையில் சிவப்பு எழுத்துக்களில் அபாய அறிவிப்பு என்று வந்தபோது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எல்லோரின் கண்களும் தொலைக்காட்சியில் நிலை குத்தி நின்றது.

இன்னும் பொழியும்....!

உணவு மழைத் தீவு - 9 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 9 :
அதிகாலையில் போர்வைகளுக்குள் முடங்கிக்கிடந்த உணவுமழைத்தீவு மக்களுக்கு அந்தத் தீவின் அபாயச்




சங்கொலி ஊதுவது கேட்டது. எல்லோரும் என்னமோ ஏதோவென்று பதறியடித்து எழுந்தனர். வீதிகளில் ஒலிபெருக்கியில் பேசும் சத்தம் கேட்டது.

அதிகாலையிலிருந்து கடும் புயல் வீசப் போவதால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். இடியாப்ப புயல் வீசும்போது இடியாப்பம் சிறிதாகவோ பெரிதாகவோ வந்து விழுந்து பூமியைத் தாக்கக்கூடும். எனவே மக்கள் தாங்கள் சேகரித்துவைத்துள்ள உணவுப்பொருட்களுடன் பாதாள அறைகளில் தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். மறு அறிவிப்புவரும்வரை பொதுமக்கள் தங்கள் பாதாள அறைகளைவிட்டு வெளியே வராமலிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அறிவித்துக்கொண்டு போனார்கள்.






அதற்குள்ளாகவா என்று பெரியவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். எல்லோரும் உணவுப்பொருட்கள், தேவையான பொருட்களுடன் பாதாள அறைகளுக்குள் சென்றனர். பொழுது விடியும் முன்பே, காற்றின் பேரிரைச்சல் கேட்டது. தொலைக்காட்சியில் வெளியே நடக்கும் காட்சிகளைப் பார்த்தனர். இடியாப்பம் ஒரு பேருந்துச் சக்கரம் அளவு பெரியதாக வந்து விழுந்துகொண்டிருந்தது.









இப்போதுதான் வீட்டு மேற்கூரைகள் சேதமாகி மாற்றினோம்.







மடமடவென்று வீடுகள் நொறுங்கி விழும் சத்தம்...இப்படியாக அதிகாலை அதிபயங்கரமான காலையாக மாறியிருந்தது.





























வேற்று கிரகத்திலிருந்து பறந்துவரும் பறக்கும் தட்டுகள் போன்று வானத்திலிருந்து பூமியை நோக்கி இடியாப்பங்கள் வந்தவண்ணமிருந்தது!





காபி ஆவி பறக்க வந்தது. ஒரு புகை மண்டலம் போல வெளியே காட்சி தருவதை தொலைக்காட்சியில் கண்டு மக்கள் பயந்தனர். சிறுவர் சிறுமியர் பயந்து நடுங்கியவாறு பார்த்துக்கொண்டிருந்தனர்.













ஒருவாறாக இடியாப்ப புயல் தன் சினத்தைக் குறைக்கும்போது மாலை மங்கத் தொடங்கியிருந்தது. உணவுமழைத்தீவு நகரியம் தன் படைபரிவாரங்களோடு உணவுப்பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வீடுதவறாமல் சேதம் மிகுந்து காணப்பட்டது. இடியாப்ப புயல் சேதங்களைச் சரிசெய்ய நான்கு நாட்கள் உணவுமழைத்தீவு மக்களுக்கும் தீவு அலுவலர்களுக்கும் தேவைப்பட்டது. இடியாப்பங்கள் ஒருவரால் தூக்க இயலாத அளவு பெரிதாக இருந்தது. இவற்றையெல்லாம் சேகரித்து ஒரு பகுதியை கடலில் மீன்கள், ஆமைகள், திமிங்கிலங்களுக்கு உணவாகப் போட்டனர். மீதியை உணவு மழைத் தீவு ‍குப்பைக் கிடங்கில் போட்டு மூடினர்.















ஒருநாள் காய்க‌றி சூப்பாக‌வே பெய்தது! இன்னொருநாள் கோழிக்க‌றியும்,சுக்கா வ‌றுவ‌லுமாக‌ பொழிந்து த‌ள்ளிய‌து! ம‌ற்றொருநாள், ரொட்டியும் வெண்ணெயுமாக‌ வ‌ந்து விழுந்த‌து. அடுத்த‌நாள் பாசிப்பருப்பு பாயாச‌மாய் பொழிய‌ அன்று அதையே வ‌யிறு நிறைய‌ச் சாப்பிட்டு குழ‌ந்தைக‌ளுக்கு வ‌யிற்றுவ‌லி என்றான‌து. ஒருநாள் பாலில்லாம‌ல் வ‌ர‌க்காப்பியாக‌ப் பெய்து காபி பிரிய‌ர்க‌ளை க‌வ‌லைப்ப‌டுத்திய‌து. சந்தோசமாக உணவு மழைத் தீவு மக்கள் வாழ்க்கை நகர்ந்தாலும் புயல், திடீர் பேரளவு உணவுமழைகளால் சில‌ நேர‌ங்க‌ளில் வாழ்க்கை க‌ச‌ந்து போகிற‌து. அப்படிக் கசந்துபோகிறநாளும் வந்தது!

இன்னும் பொழியும்....!