திங்கள், 31 ஆகஸ்ட், 2009

உணவு மழைத் தீவு ‍ 8 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு ‍ 8 :

"இன்றிரவு 6:30 மணியிலிருந்து சூடாகவும் சில மிதமான சூட்டிலும் இட்லிகளை வானம் பொழியும்; அதனைத் தொடர்ந்து இரு நிமிடங்கள் தோசைகள் சிறிதாகவோ அல்லது கொஞ்சம் பெரிதாகவோ கைபொறுக்கும் சூட்டில் விழக்கூடும்!

சிறுவர் சிறுமியர் இவற்றிலிருந்து விலகியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தோசைகளைத் தொடர்ந்து சாம்பார், சட்னிகள் பொழியும்; ஒரு சில நிமிடங்கள் சற்றுக் காரமான சாம்பார் சட்னியும், மிதமான காரத்தில் தொடர்ந்து பெய்யக்கூடும்.

ஓரிரு நிமிட இடைவெளிக்குப் பின் பூரி, ஆப்பமும், உருளைக்கிழங்கு கறியும், தேங்காய்ப்பாலும் அங்குமிங்குமாக மிதமான வேகத்தில் பொழியக்கூடும் என்று வானிலை தெரிவிக்கிறது

இன்றைக்கு காபி மட்டுமே கிடைக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. டீ இன்று கிடைக்காது என்பது மேகக் கற்றைகள் நிற மாற்றத்திலிருந்து தெரியவருகிறது. தேனீர் நாளை காலை கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! தொடர்ந்து நாட்டு நடப்புச் செய்திகளை வானதேவன் வழங்குவார். உங்களிடமிருந்து விடைபெறுவது உணவுச் செய்தி அறிக்கையாளர் ருசிவாணன்!

ருசிவாண‌ன் அறிக்கையைக் கேட்ட‌ சிறுசுக‌ளுக்கு தாங்க‌ள் வெளியே போக‌ முடியாத‌ப‌டி ஆகிவிட்ட‌ க‌வ‌லையில் இருந்த‌ன‌ர். பெரிய‌வ‌ர்க‌ள் இர‌வு உண‌வைச் சேக‌ரிக்க‌ வெளியேசென்ற‌ன‌ர்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வெளிநாட்டு நிகழ்சியொன்றை வீட்டிலிருந்த சிறுவர் சிறுமியர் ரசித்துப் பார்த்தனர். விமானங்கள் வீர சாகசம் நிகழ்த்தியதைப் பார்த்து அதிசயித்தனர். உணவு மழைத் தீவில் விமானமே கிடையாது என்பதால் அது அவர்களுக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. சாப்பிடப் போகும்வரை அதைப்பற்றியே பேசினர். விமானத்தில் பயணம் செய்தால் எப்ப‌டி இருக்கும் என்று பேசிக்கொண்ட‌ன‌ர்.

அன்று இரவு சாப்பாட்டை ருசித்து ரசித்துச் சாப்பிட்ட சிறுவர் சிறுமியர் சிறிது நேர அரட்டைகளுக்குப் பின் தூங்கிப் போயினர். விடிந்தால் அவர்களுக்கு வானம் ஒரு மோசமான செய்தியைச் சொல்லப்போவது தெரியாமல் தூங்கிப் போயினர்.

இன்னும் பொழியும்....!

உணவு மழைத் தீவு - 7 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 7 :


சிறுவர்கள், சிறுமிகள் சாலைக்கு வந்து வேடிக்கை பார்க்கத் துவங்கினர். அவ‌ர்க‌ளுக்கு ப‌ள்ளி வார‌விடுமுறை. அத‌னால் சிறார்க‌ள் கூட்ட‌ம் கூட்ட‌மாக‌ ந‌ண்ப‌ர்க‌ளோடு அர‌ட்டைய‌டித்துக் கொண்டிருந்த‌ன‌ர். தங்களுக்குத் தெரிந்த விளையாட்டுகளில் ஈடுபட்டனர். இர‌வெல்லாம் பாதாள‌ அறையில் ப‌ய‌ந்துகொண்டே இருந்த‌து குறித்துப் பேசின‌ர்.

பெரியவர்கள் வீட்டுக் கூரைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். உட‌ன‌டியாக‌ச் செய்யாவிட்டால் அடுத்த‌ நேர‌ம் வானம் பொழிவ‌தெல்லாம் வீட்டுக்குள் அல்ல‌வா வ‌ந்து விழும்! அத‌னால் துரித‌மாக‌ வேலைக‌ளைச் செய்துகொண்டிருந்த‌ன‌ர்.

"என்ன வாழ்க்கை? எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வாழ‌வேண்டியிருக்கிறதே" என்று கவலைப்பட்டனர். வ‌ருட‌த்தில் ஓரிருமுறை இப்ப‌டியான‌ "இடியாப்ப‌" சூறாவ‌ளி ஏற்ப‌டும்போது உண‌வும‌ழைத்தீவில் இதுபோன்ற‌ சேத‌ங்க‌ள் நிக‌ழ்ந்துவிடுகிற‌து.

திடீரென்று சிறார்கள் ஓவென்று சத்தம் போட்டுக்கொண்டே வீட்டுக்கு வெளியே ஓடிவந்தனர். அவர்கள் ஓடி வந்ததற்கு காரணம் "வானிலை அறிக்கை"-தான். இன்னும் சிறிது நேரத்தில் போதுமான இடைவெளியில் சிறார்களுக்கான‌ கோன் ஐஸ் கிரீம், ஐஸ் கிரீம் கேக், ரெய்ன்போ கட்லட், ஸ்கை குல்ஃபி போன்றவற்றோடு ஜூஸ் வகைகள், ஃப்ரூட் பஞ்ச் அங்குமிங்குமாகப் பொழியக்கூடும் என்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டுத்தான் அப்படி சத்தம் போட்டு ஓடிவந்தனர்.

இதற்குள் வீட்டுக்கூரைகளைச் செப்பனிட்டு முடித்து பெரியவர்கள் அலுப்போடு வீட்டுக்குள் செல்லவும் வானம் சிறார்களுக்கான சிறப்புச் சுவையுணவுகள் பொழியத்துவங்க சிறார்கள் பாடு கொண்டாட்டம்.

சிதறி விழுந்ததை ருசி பார்க்க வளர்ப்பு நாய்களும், பூனைகளும் கூட சிறார்களோடு போட்டிபோட்டு ஓடிக்கொண்டிருந்தன. ஐஸ்க்ரீம் சிறார்களுக்கு மட்டுமல்ல; பெரியவர்களும் இந்த ருசிபார்க்கும் படலத்தில் சேர்ந்துகொண்டனர்.

சிறார்கள் தங்களுக்குத் தேவையான உண் பொருள்களைச் சேகரித்ததும் தம் நண்பர்களோடு பேசிச் சிரித்து உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர்.

சிறார்களின் முகங்கள் சாப்பிட்டதற்கு அடையாளமாக சாட்சி சொல்லிக்கொண்டிருந்தது. அவர்களின் ஆட்டம் பாட்டம் எல்லாம் அரைமணி நேரத்தில் முடிந்து போனது. வீட்டு வேலை செய்து அலுத்துப்போயிருந்தவர்கள் அந்தத் தீவிலிருந்த ஒரே ஒரு உணவகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

வான‌ம் பொழியும்போது உணவகம் எதற்கு என்கிறீர்களா? சில நேரங்களில் சிலர் வானம் பொழிவதை தங்களுக்காகச் சேகரம் செய்ய இயலாமல் போய்விடும்போது அவர்கள் உணவகம் தேடிப்போவது வழக்கம்.

 உணவகத்தில் வானத்திலிருந்து பொழிந்ததை எடுத்து வைத்து வாடிக்கையாக வருவோருக்கு வழங்குவார்கள். வானம் சிலசமயம் சாப்பிட இயலாதபடி பொழிந்து தள்ளிவிடும்போது வீடுகளில் சேமித்து வைத்துக்கொள்ளாதவர்கள் உணவகம் வருவது உண்டு.

இங்கு சாப்பிடுவதற்கு கட்டணம் ஏதும் இல்லை. அங்கு பரிமாறுபவர்களுக்கு விரும்பிய காசை/தொகையை‌க் கொடுத்துவிட்டு வந்துவிடலாம். இப்படி எல்லா இடத்திலும் இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறீர்களா? தம்பி தங்கைகளே!

உணவுமழைத்தீவு மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்கிறீர்களா? அப்போது இரவு உணவுக்கான வானிலை அறிவிப்பு தொடங்கியது.

உணவு மழை இன்னும் பொழியும்...

உணவு மழைத் தீவு - 6 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 6 :


உணவுமழைத்தீவில் பொழுதுபுலர்ந்தபோதுபலருக்கு அது சுகப்பொழுதாக இல்லை.தீவில் பெரும்பாலான வீடுகள் பலத்த சேதமடைந்திருந்தது. தீவு மக்கள் அனைவரும் பாதாள அறைகளில் இருந்ததால் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை.

வீடுகளுக்கு வெளியே வந்து பார்த்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. வட்டவட்டமாய் இரண்டடி உயரத்தில் எங்கும் வெள்ளையாகக் கிடந்தது. அதேபோல பறக்கும் தட்டு போல இளஞ்சிவப்பாகவும் கரிய நிறத்திலும் எங்கும் சிதறிக்கிடந்தது.

அதே நேரத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் சொல்லத் துவங்கிவிட்டதால் பாதாள அறையில் செய்தியைக் கேட்ட போதுதான் வெளியே கிடந்தது என்ன என்பதை எல்லோரும் அறிந்தனர்.

நள்ளிரவுக்கு மேல் வானவெளியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தீவில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. வெள்ளை நிறத்தில் இராட்சச இட்டிலிகளும், பறக்கும் தட்டுபோல பிரம்மாண்ட தடிப்பாக தோசைகளும் பொழிந்தது.

இராட்சச இட்டிலிகள் மணிக்கு 16மைல் வேகத்தில் வந்து தீவுகளில் விழுந்தது. இதனால் தீவில் பல வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

சேத மதிப்பு பல லட்சம் சாகரம் (நாம் ரூபாய் என்பது போல இந்தத் தீவில் சாகரம் என்பார்கள்) இருக்கும் என்று கருதப்படுகிறது. யாரும் இந்த இராட்சச‌உணவுப்பண்டங்களைத் தொடவேண்டாம். அதில் விசக்கிருமிகள் இருக்கக்கூடுமென்று தீவு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நகர அதிகாரிகள் தக்க இயந்திரங்களைக்கொண்டு அப்புறப்படுத்துவார்கள்.

அதுவரை யாரும் தெருக்களில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். அடுத்த 30 நிமிடத்தில்மீண்டும் செய்திகள் வாசிக்கப்படும்" என்று அறிவிப்பாளர் சொல்லி மறைந்தார்.

சிறிது நேரத்தில் துப்புறவு இயந்திரங்கள் சாலைகளில் செல்லும் சத்தம் கேட்டது. கவச உடையணிந்த பணியாளர்கள் அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

பிரம்மாண்ட தூக்கு கருவிகள்,

தள்ளு கருவிகள், அள்ளும் கருவிகள்


சத்தம் காதைச் செவிடாக்கிக்கொண்டிருந்தது.

சிலமணிநேரங்களில் தண்ணீர் லாரிகள்

தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கழுவிக்கொண்டு போனது.

பின்னாலேயே ஈரத்தை உலரவைக்கும் காற்றூதி வாகனம் செல்ல சிலமணிநேரங்களில் அந்தத் தீவு தூய்மையாகிவிட்டது.

உணவு மழைத் தீவு - 5 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 5 :

சிறுவர் சிறுமிகளுக்கோ பாதாள அறை வாசத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். சிலர்,

தாங்கள் பள்ளிக்கு போக முடியாதே என்று கவலைப்பட்டனர்.

சிறுவர் சிறுமியர் உட்பட அனைவரும் இரண்டு மூன்று நாளைக்குத் தேவையான உணவை

சேகரித்து வைத்துக்கொள்ள கைகளில் பாத்திரங்களோடு தயாராக நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது.....

மாலை மணி ஆறு முப்பது. இரவு உணவாக ரவாதோசை, இட்லி, பூரி, சப்பாத்தி, சாம்பார் சாதம் என்று பொழிய ஆரம்பித்தது. எல்லோரும் முடிந்தவரை சேகரித்தார்கள்; சிறிது நேரத்தில் சட்னி மழை பொழிய அதையும் பாத்திரங்களில் பிடித்து பத்திரமாக பாதாள அறைக்கு கொண்டுபோய் வைத்தனர்.

சிலர் ஒரு வாரத்திற்கு போதுமான உணவைச் சேகரித்து வைத்துக்கொண்டனர். அடுத்த ஓரிரு நாட்கள் எப்படியிருக்குமோ என்ற அச்சத்தில் பலர் இருந்தனர். சிறுவர் சிறுமியர் பாடுதான் ஒரே கொண்டாட்டமாக இருந்தது.

ஒரு வழியாக எல்லோரும் பாதாள அறை வாழ்க்கைக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டிருந்தபோதுதான் வீடே அதிரும்படியான சத்தம் கேட்டது.

எல்லோரும் பாதாள அறைகளில் இருந்ததால் சத்தம் கூடுதலாகவே கேட்டது. பாதாள அறையிலிருந்த தொலைக்காட்சித் திரையில் எல்லோரின் விழிகளும் பதிந்து கிடந்தது; வானிலை அறிவிப்பாளர் வார்த்தைக்கு வார்த்தை எச்சரிக்கை, பாதுகாப்பு, வெளியே வராதீர்கள் என்று சொல்லி எல்லோர் வயிற்றிலும் புளியைக் கரைத்துக்கொண்டிருந்தார்.

திடீர் திடீர் என மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது வீட்டிலிருந்த சிறுசுகளுக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியது. வீட்டிலிருந்த பெரியவர்கள் மெழுகுவர்த்திகளை தயாராக எடுத்து வைத்துக் கொண்டனர்.

குழந்தைகளை சாப்பிட்டுவிட்டுத் தூங்கவைத்தனர். வெளியே தீபாவளிப் பட்டாசு வெடி ஓசைகள் போல பட், தட், தடார் என்று வெவ்வேறு ஓசைகள் இடைவெளியின்றி கேட்டவண்ணமிருந்தன.

நேரம் ஆக, ஆக பெரியவர்களுக்கும் தூக்கம் கண்களைச் சுழற்ற உட்கார்ந்த நிலையிலும், சோபாவில் சாய்ந்த நிலையிலும் தூங்கத் துவங்கியிருந்தனர். சிலர் தூக்கம் வராமல் இருக்க தேனீர் கோப்பைகளை கைகளில் எடுத்துக் கொண்டு அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தனர்.

சிலர் நண்பர்கள், உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் கவலைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்தனர்.

திடீரென்று மின் தொடர்பு அறுந்தது. வானமே பெயர்ந்து பூமியில் விழுந்தது போல ஒரு பெரும் ஓசை தூங்கிக் கொண்டிருந்தவர்களை துள்ளி எழச் செய்தது. மெழுகுவர்த்திகள் ஒளி நடனம் புரிய, காரிருள், இரைச்சல், சில்லென்று விழுந்து உடையும் கண்ணாடிகள் எழுப்பும் சத்தம் எல்லாம் கலவையாய் அவர்களின் காதுகளில் விழுந்து இருதயக் கூட்டுக்குள் பொங்கிய அச்சம் முகங்களில் தெரிந்தது.

வீடுகளின் உச்சியில் யாரோ பாறாங்கல்லை உருட்டி விட்டது போல கடகடவென விழுந்து உருளும் சத்தமும் தொடர்ந்து வீட்டுக்கூரை சடசடவென முறிந்து விழும் ஓசையும் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைக்கூட எழுப்பிவிட்டது.

எழுந்த குழந்தைகள் மிரண்டுபோய் அப்பா, அம்மாக்களைக் கட்டிப் பிடித்துக் கொள்ள, உணவு மழைத் தீவில் இருந்த அத்தனை பேரும் உயிர் பிழைப்போமா என்ற அச்சத்தை விதைத்திருந்தது.

அவர்கள் அச்சப்பட்டது போலவே, மறுநாள் பொழுது விடிந்தபோது.....

உணவு மழை இன்னும் பொழியும்.....!

உணவு மழைத் தீவு - 4 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 4 :

ஒரு நாள் மாலை !
இரவு உணவு என்ன?
என்பதை அறிய எல்லோரும் அவரவர் வீட்டு டி.வி.முன்பாக அமர்ந்திருந்தனர். அப்போது வானிலை அறிவிப்பாளர் சொன்ன செய்தி அனைவரையும் திடுக்கிட வைத்தது.
“இன்று இரவு நம் தீவை பலத்த உணவுப் புயல் தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு இரவு உணவாக ரவாதோசை, இட்லி, பூரி, சப்பாத்தி, சாம்பார் சாதம் ஒவ்வொன்றும் தலா ஆறு நிமிடங்களும் தொடர்ந்து தேங்காய் சட்னி, தக்காளிச் சட்னி, கொத்தமல்லி சட்னி, சாம்பார் தலா இரண்டிரண்டு நிமிடங்களும் பொழியும்.

அப்போது காற்று எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள், தங்களுக்கு இரண்டு நாளைக்குத் தேவையான உணவைச் சேகரித்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இரவு 7.30 மணிக்கு வானிலை மிக மோசமான நிலையை அடையும். எனவே பொது மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாமென்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

சுழன்று வீசும் சுறாவளிக்காற்று புயலாக மாறி இடி மின்னலுடன் உணவு மழை பெய்யும். மின்னலால் தாக்கப்பட்டு உணவுப்பொருள்கள் சாப்பிட இயலாத வண்ணம் கருகிப்போய் வந்து விழும். சில சமயம் ஆடு, கோழி இறைச்சிகள் அப்படியே சமைக்கப்படாமல் முழுதாக கீழே விழ நேரிடலாம்.

இதனால் வீடுகள் சேதமடைய நேரிடலாம். பொதுமக்கள் தற்காப்பு கருதி அவரவர் வீடுகளில் உள்ள பாதாள அறைகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று இரவு எட்டு மணிக்குள் எல்லோரும் பாதாள அறைக்குச் சென்று விட வேண்டும்.

பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் இப்போதே பாதாள அறைக்கு எடுத்துச் சென்று வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தீவில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஒருவாரகாலத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீவில் உள்ள பொதுமக்கள் எந்த நேரமும் பொதுச் சேவைக்கு அழைக்கப்படும்போது வரத் தயாராக இருக்கவேண்டும் என்று தீவு நிர்வாக அதிகாரி அறிவிக்கிறார்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை பதாள அறையை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப் படுகிறர்கள்" என்று அறிவிப்பாளர் சொல்லி முடித்ததும் அந்தத் தீவு பொதுமக்களை பயமும் பீதியும் ஒருங்கே கவ்விக்கொண்டது.

உலகத்தில் உணவுக்காகத்தான், அத்தனை பாடும் படுகிறார்கள். இங்கே தேவையான உணவு கிடைத்தும் சமயாசமயத்தில் இப்படி ஆகிவிடுகிறதே என்று மிகுந்த கவலை கொண்டனர்.

அந்தத் தீவு மக்கள் எல்லோரும் அடுத்த சில நிமிடங்களுக்குள் பரபரப்பாகிவிட்டனர். பெரியவர்கள் கவலைப் பட்டனர்.

கடும் வேகத்தில் வந்து விழுந்து வீட்டுக் கூரை போய்விட்டால் என்ன செய்வது? அல்லது வீடே இடிந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது? என்ற கவலைகளில் மூழ்கிப் போய்விட்டனர்.

சிறுவர் சிறுமிகளுக்கோ பாதாள அறை வாசத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். சிலர், தாங்கள் பள்ளிக்கு போக முடியாதே என்று கவலைப்பட்டனர்.

சிறுவர் சிறுமியர் உட்பட அனைவரும் இரண்டு மூன்று நாளைக்குத் தேவையான உணவை சேகரித்து வைத்துக்கொள்ள கைகளில் பாத்திரங்களோடு தயாராக நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது.....

உணவு மழை இன்னும் பொழியும்.....!

உணவு மழைத் தீவு - 3 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 3 :

மக்கள் தங்கள் தேவைக்கு மேல் கொஞ்சம் கூடுதலா எடுத்து வந்து... இல்லை, இல்லை பாத்திரங்களில் பிடித்து வந்து வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள்.

எதிர்பாராவிதமாக புயல், சூறாவளி அடித்தால் மக்களால் வீட்டுக்கு வெளியே வந்து உணவுப் பதார்த்தங்களை சேகரிக்க முடியாமல் போகும்.

அதனால் ஒருவேளை அல்லது இரண்டு வேளை உணவு எப்போதும் எல்லார் வீடுகளிலும் தயாரா இருந்து கொண்டே இருக்கும்!

இந்த நகரத்துல ஒரு உணவு விடுதிகூட கிடையாது. அதற்கான அவசியமும் இல்லையல்லவா? அதனால்தான் அவர்கள் அப்படி சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள் என்றார் தாத்தா.

உடனே ரவிக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள்ளாம் வாங்குறதுக்குக் கூட கடைகள் கிடையாதா? தாத்தா என்று கேட்டான்.

"தாத்தா சொல்லுவாங்கடா, அதுக்குள்ள முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக்கிட்டு கேக்காதே" என்றாள் நிகிலா.

"சரி... சரி சின்னப் பையந்தானேம்மா" என்ற தாத்தா, "மிட்டாய், பிஸ்கெட்டுகள், ஐஸ்க்ரீம், சாக்லேட், கேக்..இப்புடி எல்லாத்துக்கும் வானமே கடை! அதுக்கும் வானம் ஒரு நேரம் ஒதுக்கி "சிறுவர் நேரம்" என்ற நேரத்தில் வானம் பொழியும்! அந்த நேரத்தில் சிறுவர்கள் பாடு ஒரே கொண்டாட்டம்தான்!

அந்த ஊரில் முனிசிபாலிடிக்காரங்களுக்குத்தான் இராப்பகலா வேலை இருக்கும்.

வானம் உணவு வகைகளை சப்ளை செய்துட்டு கொஞ்ச நேரத்துல மழை பெய்து இயற்கையாவே சுத்தப்படுத்தினாலும் கூட ஆங்காங்கே இட்லி, தோசை, சிக்கன், மட்டன் அப்டீன்னு கீழ கிடக்கும்.

அதை எல்லாம் சுத்தப்படுத்துறதுக்குரிய வாகனங்களைக் கொண்டுவந்து சுத்தப்படுத்தி, அவற்றை எல்லாம் அந்த வாகனத்தின் பின்னால் வரும் லாரியில் எடுத்து நகரை ஒட்டிய கடலில் கொண்டுபோய் மீன்களுக்கு உணவாகப் போட்டு விடுவார்கள். அந்த வேலையைச் செய்ய வீட்டுக்கு ஒருவர் தினமும் போயாக வேண்டும்.

காலையிலிருந்து இரவு பத்து மணி வரை நகர் துப்புறவுப் பணிக்கு என்று ஆட்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் உணவு மழை புயல் வீசி அதிகமாக பொழிந்து தள்ளி விட்டால் சமயத்தில் ஹெலிகாப்டர் உதவி கொண்டு எல்லாம் துப்புறவுப் பணி மேற்கொள்ளவேண்டியிருக்கும்.

துப்புறவுப் பணி செய்யும்போது சில சமயங்களில் காற்று நூறு மைல் வேகத்தில் அடிக்கும். அப்போதெல்லாம் சுத்தப்படுத்துகிற வேலை மிகவும் கஷ்டமாக இருக்கும். வானிலைக்கு ஏற்றவாறு அவர்கள் உடை அணிந்திருக்கவேண்டும்.

ஒரு முறை இரவு உணவுக்கு மட்டன், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, ஆஃப் பாயில், ஆம்லெட் என்று மாறி, மாறிக் கொட்டித் தீர்த்துவிட்டது. ஆனால் பருவ நிலைக் கோளாறால் விடியவிடியப் பெய்து தெருவெங்கும் ஒரு ஆள் உயரத்துக்கு நிறைந்து காணப்பட்டது.

பெரியபெரிய கிரேன்களைக் கொண்டு வாரக் கணக்கில் சுத்தம் பண்ண வேண்டியிருந்ததால் முட்டை, மட்டன், சிக்கன் நாற்றம் குடலைப் புரட்ட ஆரம்பித்து விட்டது.

இது போன்ற எதிர்பாரத சமயங்களில் இந்த நகரத்து மக்களுக்கு அந்த வாழ்க்கை வெறுத்துப்போகும். அப்படி ஒரேயடியாக வெறுக்க வேண்டிய சூழ் நிலையும் ஒரு நாள் வந்தது!


உணவு மழை இன்னும் பொழியும்.....!

உணவு மழைத் தீவு - 2 : தமிழண்ணா

உணவு மழைத் தீவு - 2

ஒரு நீண்ட மலை; ஒரு பெரிய பாலைவனம்; ஒரு குட்டிக் கடல்; அந்தக் குட்டிக் கடலில், ஒரு குட்டித் தீவு நகரம்.

அந்தக் குட்டித் தீவுக்கு "உணவு மழைத் தீவு" ன்னு பெயர். அந்த நகரத்துக்கு இரண்டே தெரு. ஒரு வரிசைக்கு 500 வீடுகள். ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலும் பெரிய பாத்திரம் இருக்கும். வீட்டுக்குப் பின்னால் பூந்தோட்டம் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் செல்லப் பிராணிகளாக நாயும் பூனையும்!

அந்த நகரம் உலகத்திலேயே அதிசயமான நகரமும் கூட; அந்த ஊர்ல யாரும் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டியதில்லை. வீட்டுல சமைக்க வேண்டியதில்லை. அந்த ஊர்ல இருப்பவங்களுடைய தேவைகளை வானம் தினமும் மும்மாறி பொழிந்து பூர்த்தி செய்யும்!

காலையில் எல்லோரும் எழுந்ததும் தங்கள் டி.வி. முன்னால் உட்கார்ந்து வானிலை நிலவரம் பற்றிய செய்தியைக் கேட்பார்கள். எப்போ இடி இடிக்கும்?

மழை வரும், என்று அறிந்துகொள்வதற்காக உட்காருவதில்லை.

காலையில் எந்த நேரத்தில் காபி? எந்த நேரத்தில் சிற்றுண்டி? மதிய, இரவு உணவு நேரங்கள் பற்றியதாகத்தான் வானிலை அறிவிப்பாக இருக்கும். வானிலை அறிவிப்புகள் சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் வருத்தம் தருவதாகவும் இருக்கும்.

தினசரி மக்களின் முக்கிய வேலைகளுள் ஒன்றுதான் டி.வி. பார்ப்பது. வானிலை அறிவிப்பு இப்படித்தான் இருக்கும். இன்றைய வானிலை அறிவிப்புகளை வழங்குவது உங்கள் வானதேவன்!

இன்று அதிகாலை சரியாக 5மணிக்கு ஒருமணி வேகத்தில் காற்று இல்லாமல் மேகம் பால் மழை பொழியும். சரியாக 5. 05-க்கு காபி டிக்காசன், அதைத் தொடர்ந்து தேனீர் டிக்காசன் மூன்று நிமிடங்கள்.

பின் பத்து நிமிடங்களுக்கு தண்ணீர் மழை பொழியும்! அதிகாலைச் சுடு பானம் அருந்துபவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள் மீண்டும் 6.15க்கு இரண்டு மணி வேகத்தில் காற்று வீசாமல் பால்மழை பொழியும்! 6.20-க்கு காபி டிக்காசன், 6.25-க்கு தேனீர் டிக்காசன், 6.29-க்கு வடை மழை, தொடர்ந்து இட்லி, தோசை கலந்தும் தனித்தனியாகவும் 6.33 வரையில் பெய்யும். 6.40-லிருந்து 6.50 வரை தண்ணீர் மழை மணிக்கு முப்பது மைல் வேகத்தில் பொழியும்.

இந்த நேரங்களில் யாரும் வீட்டுக்கு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

அடுத்த வானிலை அறிவிப்பு வரை " வானமே வாழ்க " திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை நேயர்கள் கேட்டு மகிழலாம் " என்று அறிவிப்பு வரும்.

அதே போல மதியம், மாலை, இரவு உணவு என்ன? சைவ, அசைவ உணவுகள், இன்றைய ஸ்பெஷல் போன்ற அறிவிப்புகள் இடம் பெறும்.

வெயில் நேரங்களில் அவ்வப்போது சூப், ஜூஸ் வகைகள் பொழிவதும் உண்டு.

உணவுமழை இன்னும் பொழியும்.....!

உணவு மழைத் தீவு - 1 : தமிழண்ணா

<>உணவு மழைத் தீவு<> - 1 :

கோடை விடுமுறை. விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்கஅகிலா, நிகிலா இவர்கள் தம்பி ரவி மூவரும் கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டுக்கு வந்திருந்தனர்.

தோட்டத்தில் புங்க மரத்தில் ஊஞ்சல் கட்டிக் கொடுத்திருந்தார், தாத்தா. மூவருக்கும் அதில் போட்டி போட்டுக் கொண்டு ஆடுவதில் சந்தோஷம்.

தோட்டத்தின் வடக்குப் பகுதியில் கோழிப் பண்ணை; அதற்கு கொஞ்சம் தள்ளி சிறு மரவீடு. அது புறாக்களுக்குரிய வசிப்பிடம்.

அகிலா பாட்டிக்கு ஒத்தாசையாக இருப்பாள். தாத்தாவோடு கோழிப்பண்ணையில் முட்டைகளைச் சேகரிக்க நிகிலாவுக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம்.

ரவிக்கு புறாக்களை வேடிக்கை பார்ப்பது, எந்தப்புறா முட்டையிட்டிருக்கிறது? எந்தப் புறாக் குஞ்சு கண் விழித்துப் பார்க்கிறது? என்பதை ஒலி எழுப்பாமல் கவனிப்பான்.

எப்படியோ மூவருக்கும் நகரத்தின் இரைச்சல்கள் இல்லாமல் விடுமுறை அமைதியாகவும் இனிமையாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பாட்டி கோழிக் குருமா வைத்துக் கொண்டிருந்தார். தாத்தா தோசைக்கல்லில் தோசை வார்த்துக் கொண்டிருந்தார். நிகிலாவும் ரவியும் உணவு மேஜை முன்பாக பசியோடு உட்கார்ந்திருந்தனர்.

கோழிக்குருமா வாசம் வேறு பசியை அவர்களுக்கு அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. " தாத்தா, சீக்கிரம் தாத்தா. வயித்தைப் பசிக்குது, சீக்கிரம் தோசையைக் கொண்டாங்க " என்று ரவி நிமிடத்துக்கு ஒரு குரல் கொடுத்துக்கொண்டிருந்தான்.

" இதோ ஆச்சு...ஆச்சு " என்று தாத்தா சொல்லி முடிக்கவும் ரவி, "ஆ" என்று அலறவும் எல்லோரும் ரவியை நோக்கித் தங்கள் பார்வையை வீசினர்.

சந்திர மண்டலத்தில் விண்கலம் ஒன்று இறங்கியது போல ரவியின் தலையில் சற்று முகத்தை மறைத்தவாறு அது!

அதனால்தான் ரவி அலறியிருக்கிறான். நிகிலாவும் அகிலாவும் அதைப் பார்த்து சிரியோ சிரி என்று சிரித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் அப்படிச் சிரிக்கக் காரணம்? இதுதான்!.

தாத்தா சற்று கரண்டியில் வேகத்தைக் காட்ட "விர்"ரென்று பறந்து வந்த தோசைதான் அது!?

"போதும் நீங்க தோசை சுட்டு புள்ளைக்குச் சூடு போட்டது.

நகருங்க என்று பாட்டி, தாத்தாவை இடத்தைக் காலிபண்ண வைத்தார்.

கொஞ்ச நேரத்தில் பாட்டி சுடச்சுட சுட்டுப்போட்ட தோசைகள் கோழிக் குருமாவோடு எல்லோர் வயிற்றிலும் அடக்கமானது.

நிகிலா, ரவியைக் கேலி பண்ணிக்கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் ரவியோட நெற்றி பனியாரம் மாதிரி வீங்கப்போகுது.

ரெண்டு நாளைக்கு எங்கும் வெளியே போக முடியாது, பாரேன்" என்றாள்.

தாத்தாவிடம் ரவி, நிகிலாவைப் புகார் செய்து கொண்டிருந்தான்.

" ரவி, நிகிலா சொன்னா சொல்லீட்டுப் போகட்டும். சொல்றவங்களுக்குத் தானே வாய் வலிக்கும். நீ, ஏன் கவலைப்படணும். இரு, நான் இப்ப மருந்து போடுறேன். சரியாப்போகும், " என்றார் தாத்தா.

"இராத்திரி தாத்தா உனக்கு ஒரு அற்புதமான கதை சொல்லப் போறேன்.

இந்த மாதிரி கதையை முன்னாடி நீ கேட்டிருக்க முடியாது. நிகிலாவுக்கு இந்தக் கதை கிடையாது," என்று சொல்லி ரவியை தாத்தா சமாதானப்படுத்தினார்.

"அய்! தாத்தா எனக்கு மட்டும் கதை சொல்லப் போறாங்களே " என்று சந்தோஷமாக நிகிலாவிடம் சொல்லி அழகு காட்டினான்.

"தாத்தா என்ன உன் காதுல இரகசியமாவா கதை சொல்லப்போறாங்க. கதை சொல்லும்போது எனக்கும் கேக்கத்தானே செய்யும்," என்றாள் நிகிலா பதிலுக்கு.

"நீங்கள்ளாம் தூங்கினதுக்கு அப்புறமா தாத்தா வந்து எனக்கு மட்டும் சொல்லுவாங்களே " என்று ரவி சொல்ல நிகிலா தாத்தாவிடம் சண்டை போட ஆரம்பித்தாள்.

" தாத்தா, எனக்கும் அகிலாவுக்கும் சேர்த்துத்தான் கதை சொல்லணும்.

அது என்ன நீங்க ரவிக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்றேன்னு சொல்லீருக்கீங்க? என்று கேட்கரவி, சொல்லக்கூடாது என்று சொல்ல ஒரே அமர்க்களாமாயிருந்தது.

"சரி... சரி எல்லோருக்கும் சேர்த்தே கதை சொல்றேன்," என்று சொன்ன பிறகுதான் சத்தம் ஓய்ந்தது அங்கு.

என்னடா, இது திடீர்னு, இந்தத் தாத்தா சரண்டர் ஆயிட்டாரே என்று ரவிக்கு உள்ளுக்குள் வருத்தமாகத்தானிருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், " தாத்தா நீங்க சொல்லப் போற கதைப் பெயரை மட்டும் எனக்குச் சொல்லுங்க தாத்தா ப்ளீஸ்," என்றான்.

தாத்தாவும் ரவியின் காதுல ரகசியமாச் சொன்னார். சொல்லீட்டு கோழிப் பண்ணைக்குப் புறப்பட்டுப் போனார்.

தாத்தா போனப்புறம், " அட! கதையோட பேரே ரெம்ப நல்லாருக்கே! " என்று ரவி துள்ளிக் குதித்தான்.

"ரெம்பத்தான் அலட்டாதே. அதான் இராத்திரி தாத்தா சொல்லப்போறாங்களே. அப்பத் தெரிஞ்சிட்டுப் போகுது என்ன கதைன்னு? என்று நிகிலா சொன்னாள்.

என்ன இருந்தாலும் இந்த ரவிப்பயகிட்ட மட்டும் தாத்தா சொல்லீட்டுப் போயிட்டாங்களேன்னு நிகிலாவுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். உடனே வீட்டைவிட்டு நிகிலா வெளியே போனாள்.

போன வேகத்தில் நிகிலா வந்து, " எங்கிட்டயும் தாத்தா கதைப் பேரைச் சொல்லீட்டாங்களே! " என்று சந்தோஷமாகச் சொன்னாள். அதைக் கேட்டதும் ரவியின் முகம் வாடிவிட்டது.

"உணவு மழைத் தீவு ன்னு சொல்லீட்டாங்களா தாத்தா?" என்றான் ரவி.

"அய்! தாத்தா சொல்லல. நீயே சொல்லீட்டீயே," என்று நிகிலா கைதட்டிச் சிரித்தாள்.

இரவுச் சாப்பாடு முடிந்து எல்லோரும் கூடத்தில் தாத்தாவை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் தாத்தாவும் அங்கே வந்து சேர்ந்தார். " என்ன, எல்லோரும் கதை கேட்க ரெடியா? " தாத்தா கேட்டார்.

 மூவரும் நாங்க ரெடி என்றனர். எல்லோரின் கண்களும் தாத்தாவின் மேல் பதிந்திருந்தன. தொண்டையைச் செருமி, சரி செய்துகொண்டு கதையை ஆரம்பித்தார்.



-உணவு மழை தொடரும்....