ஞாயிறு, 11 நவம்பர், 2012

<>நன்மை செய்வதிலும் தவறு....!<>


நன்மை செய்வதிலும் தவறு....!

டர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று அட்டகாசம் செய்து கொண்டிருந்தது.  அந்தவழியாகப் போவோர் வருவோரை அடித்துச் சாப்பிடுவது அதன் வாடிக்கையாக இருந்தது. காட்டு விலங்குகளே அந்தச் சிங்கம் இருக்கும் திசைப் பக்கம் போவதில்லை.

இந்தச் சிங்கத்தினை எப்படியாவது பிடித்துவிட அருகிலுள்ள கிராமத்தினர் திட்டமிட்டனர்.  சிங்கம் கூண்டில் நுழைந்தவுடன் மூடிக்கொள்ளும் வகையில் கூண்டு ஒன்று தயார் செய்தனர். சிங்கம் நடமாடும் பகுதியில் கொண்டு போய் வைத்தனர். கூண்டுக்குள் ஒரு ஆட்டுக்குட்டியைக் கட்டிவைத்திருந்தனர்.  ஆட்டுக்குட்டி "மே"என்று கத்தும் சத்தம் சிங்கத்தைக் கூண்டுக்குள் வரவைத்து விடும் அல்லவா?
அதனால் தான் இப்படியான ஏற்பாட்டைச் செய்தனர்.

ஆட்டுக்குட்டி பசியால் கத்திக்கொண்டே இருந்தது. இரவு நேரத்தில் ஆட்டுக்குட்டி போடும் சத்தம்
கேட்டு சிங்கம் அங்கே வந்தது.  ஆட்டுக்குட்டி இருந்த கூண்டைச் சுற்றிச் சுற்றி வந்தது சிங்கம்.
இன்றைக்குச் சரியான வேட்டை என்று நினைத்தது சிங்கம். ஒரே பாய்ச்சலில் கூண்டுக்குள்
சிங்கம் பாய்ந்தது; சிங்கம் கூண்டுக்குள் பாய்ந்ததும் கூண்டுக் கதவு மூடிக்கொண்டது.  சிங்கம்
அதனைப் பற்றிக் கவலைப் படாமல் தன் இரையை அடித்துச் சாப்பிடுவதில் இருந்தது.

சாப்பிட்டு முடித்ததும் அந்தக் களைப்பில் அப்படியே படுத்து சிங்கம் தூங்கிவிட்டது.
மறுநாள் காலையில் சிங்கம் தான் வசமாகச் சிக்கிக்கொண்டோம் என்பதை உணர்ந்தது.

கிராமத்தினரோ, சிங்கம் பசியால் வாடிச் சாகட்டும் என்று கூண்டிலேயே விட்டுவிட்டனர்


அந்த வழியே வந்த அயலூர் வழிப்போக்கன், சிங்கம் கூண்டில் அடைபட்டிருப்பதைப் பார்த்தான்.

"என்னை இந்தக் கூண்டிலிருந்து வெளியே விட்டுவிடு; உனக்கு புண்ணியமாகப் போகும்.
நான்கு நாட்களாக‌ அடைபட்டுக் கிடக்கிறேன்." என்று சிங்கம் பரிதாபமாக அந்த வழிப்போக்கனிடம்
சொன்னது.

"நான் கூண்டைத் திறந்துவிட்டால் நீ என்னை அடித்துச் சாப்பிட்டுவிடுவாயே; நான் மாட்டேன்,"
என்றான் வழிப்போக்கன்.

அதற்குச் சிங்கம் சொன்னது. "பயப்படாதே. நீ எனக்கு உதவி செய்கிறாய். உன்னை ஒன்றும் செய்ய‌
மாட்டேன். என்னை நம்பு," என்றது சிங்கம்.

வழிப்போக்கனும் சிங்கத்தின் மேல் பரிதாபப்பட்டு கூண்டைத் திறந்துவிட்டான்.

நான்கு நாட்களாகப் பசியோடிருந்த சிங்கம், வெளியே வந்ததும் அதன் குணத்தைக் காட்டிவிட்டது.
வழிப்போக்கன்மீது சிங்கம் பாய்ந்தது. வழிப்போக்கன் கொஞ்சம் விலகிக் கொண்டதால் தப்பித்தான்.

"உதவி செய்த என்னையே கொல்லப்பார்க்கிறாயே, இது நியாயமா?" என்று வழிப்போக்கன் கேட்டான்.

"என் பசி எனக்குத் தெரியும். இன்றைக்கு எனக்கு நீ தான் இரை. என் மீது நீ இரக்கம் காட்டுவது
உன் இயல்பாக இருக்கலாம்; என் இயல்பான குணம் தெரியாதது உன் தவறு," என்றது சிங்கம்.

சற்று தூரத்தில் இதைக் கவனித்துக் கொண்டிருந்த "புலி" அங்கே வந்தது.

"புலியாரே நீங்களே எனக்கு ஒரு நியாயம் சொல்ல வேண்டும்,"என்றான் வழிப்போக்கன்.


"என்ன நடந்தது என்பதை தெளிவாகச் சொல்லுங்கள் இருவரும்; நான் இருவருக்கும் பாதகமில்லாமல்
தீர்ப்புச் சொல்கிறேன்," என்றது புலி.

சிங்கம் நினைத்தது. புலி நம் இனம். எனவே அது நமக்குச் சாதகமான தீர்ப்பைத்தான் சொல்லும் என்று நினைத்தது.

வழிப்போகனோ, புலிக்கும் சிங்கத்துக்கும் ஆகாது; எனவே புலி நமக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பைச் சொல்லும்
என நினைத்தான்.

வழிப்போக்கன் புலியிடம் சொன்னான்.

"என்னைக் கூண்டிலிருந்து திறந்து வெளியே விடு; எனக்கு உதவி செய்வதால் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்என்று சொன்னதால்தான் சிங்கத்தை கூண்டிலிருந்து விடுவித்தேன்.  ஆனால் சிங்கம் வெளியே வந்ததும் வாக்குத் தவறி என்னைக் கொன்று சாப்பிடப் பார்க்கிறது. காப்பாற்றிய என்னைச் சிங்கம் கொல்ல நினைப்பது சரியா?" என்று நியாயம் கேட்டான் வழிப்போக்கன்.

இப்போது,சிங்கம் புலியிடம் சொன்னது.


"விலங்குகளையும் மனிதனையும் வேட்டையாடிச் சாப்பிடுவது என் இயற்கையான குணம்.  மனிதனுக்கு பகுத்தறியும் அறிவு இருக்கிறது. என்னைக் காப்பாற்றும் முன் யோசிக்காதது அவன் தவறு. நாலு நாள் பசியோடிருக்கும் எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை; எனக்குத் தேவையான இரையை நான் அடைய நினைத்தது தவறா?" சிங்கம் நியாயம் கேட்டது.

சிங்கத்துக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். எப்படி என்பதை புலி ஒரு நொடி யோசித்தது. அதன் பின் சிங்கத்தைப் பார்த்துச் சொன்னது.


"நடந்ததைத் தெளிவாக இருவரும் சொல்ல வேண்டும். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? சிங்கம் உங்களிடம்
சொன்னதை அப்படியே சொல்லுங்கள்," என்ரது புலி.

"நான் இந்த ஒற்றையடிப் பாதையில் அந்தப் பக்கமிருந்து வந்தேன்.  சிங்கம் கூண்டிலிருப்பதைப் பார்த்தேன்.
இந்தக் கூண்டின் முன் வந்து நின்றேன். அப்போது சிங்கம் என்னிடம் உதவி கேட்டது." என்ரான் வழிப்போக்கன்.

"சரி, இவர் கூண்டுக்கு முன்பாக வந்தபோது நீ எங்கிருந்தாய்?" என்று புலி சிங்கத்தைப் பார்த்துக் கேட்டது.

"இவர் வரும்போது நான் கூண்டுக்குள் தான் இருந்தேன்," என்றது சிங்கம்.

"கூண்டுக்குள் எந்த இடத்தில் நீ இருந்தாய்?" என்று புலி சிங்கத்தைக் கேட்டது.

"இதோ இங்குதான் இருந்தேன்," என்று சிங்கம் கூண்டுக்குள் நுழைந்தது.

வழிப்போக்கன் சற்றும் தாமதிக்காமல் கூண்டின் கதவைத் தாளிட்டான்.


"என் இனமாக இருந்தும் நீ துரோகம் செய்துவிட்டாய்"என்று சிங்கம் புலியைப் பார்த்துக் கூறி கர்ஜித்தது.

"யாராக இருந்தாலும் உதவி செய்தவருக்குத் தீங்கு நினைக்கக் கூடாது.  உன்னைக் காப்பாற்றியவரைக்
கொன்று தின்ன நினைப்பது சரியில்லை," என்று சிங்கத்திடம் புலி சொன்னது.

"அவரவர்களுடைய இயல்புகளை அறிந்திருந்தும் தவறாக உதவிவிட்டேன்," என்று வழிப்போக்கன்
புலியிடம் சொல்லி தனக்கு உதவியமைக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டான்.

சிங்கம் தன் நிலையை எண்ணி வருந்தியது. காலதாமதமாக உணர்ந்து என்ன செய்வது?

நீதி:- 
இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார்:-

நன்று ஆற்ற லுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக்கடை.

அதாவது, அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால்
நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.










சனி, 10 நவம்பர், 2012

<>பகற்கனவு<>


ரு ஊரில் ஒரு அம்மாவும் பெண்ணும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு பசுமாடு தான் சொத்து.

அம்மா பால் கறந்து மகளிடம் கொடுப்பாள்; மகள் அதைக் கொண்டு போய் விற்றுவிட்டு வருவாள்.
பால் விற்றுவரும் காசில்தான் இருவரின் வாழ்க்கையும் நடக்கும்.

ஒரு நாள் பால் விற்பதற்காக மகள் சென்றாள். ஒற்றையடிப்பாதையில் நடந்து போய்க் கொண்டிருந்தவளுக்கு எதிரில் அவள் வயதை ஒத்த பெண்கள் வருவதைப் பார்த்தாள்.  அவர்கள் நல்ல உடை உடுத்தி இருந்தனர்.  நகைகள் அணிந்திருந்தனர். பணக்கார வீட்டுப் பெண்கள் என்று நினைத்துக்கொண்டாள்,இவள்.

திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை வந்தது.  இன்றைக்கு விற்கும் பால் காசில் கோழிக்குஞ்சுகள் வாங்கிக்கொண்டு வந்து வளர்க்க வேண்டும்; அந்தக் கோழிக்குஞ்சுகள் வளர்ந்து பெரிய கோழிகள் ஆனதும் அவைகளை விற்றுவிட்டு ஆட்டுக்குட்டிகள் வாங்கிவிட வேண்டும்.  அந்த ஆட்டுக் குட்டிகள் வளர்ந்து பெரிய ஆடுகளானதும் அவைகளை விற்று பசுமாடுகள் வாங்க வேண்டும்; அப்படியே நிறைய மாடுகள் ஆகி பால்பண்ணை வைத்துவிட வேண்டும்.

அப்போது இந்த ஊரிலேயே நாம் தான் பெரிய பணக்காரியாகிவிடுவோம். அய்..நினைக்கவே சந்தோசமாக‌ இருக்கிறதே என்று  துள்ளிக்குதித்தாள். கற்பனை சந்தோசத்தில் தலையிலிருந்த பால் குடத்தை மறந்துபோனாள்.  இவள் துள்ளிக் குதித்தவுடன் தலையில் இருந்த பால் குடம் கீழே விழுந்தது; அதிலிருந்த‌
பால் எல்லாம் பாழாய்ப் போனது.

அன்றைக்கு பால் விற்றுக் கிடைக்கும் காசும் போனது; அம்மாவிடம் அடியும் திட்டும்தான் அவளுக்கு கிடைத்தது. அவளின் அதிக கற்பனையால் உள்ளதும் போச்சு என்றானது.

நீதி:- செய்யும் செயலில் கவனம் இல்லாவிட்டால் இருப்பதும் போய் சிரமப்படும் நிலைதான் ஏற்படும்.

-ஆல்பர்ட், அமெரிக்கா.

<>முட்டாள் ராஜா<>

ஒரு ஊரில் ஒரு ராஜா.

அந்த ராஜா, தன் மனம் போன
போக்கில் ஆட்சி செய்தான்.
திடீர், திடீரென்று மக்களுக்கு
முட்டாள்தனமாக கட்டளை பிறப்பிப்பான். நல்லவர்களுக்குத்தண்டனை கொடுப்பான். கொலைகாரனை, கொள்ளைக்காரனை விடுதலை செய்வான். அவனிடம் இல்லாததால் திருடினான். தப்பு செய்தவனை கொலை செய்தான். அதில்தவறு ஏதும் இல்லை என்று சொல்வான், முட்டாள் ராஜா.


யாராவது நியாயம் சொல்கிறேன் என்று போனால் அவர்கள் தலையை சீவும்படி உத்திரவு போடுவான்.

இதற்குப் பயந்து முட்டாள் ராஜாவை யாரும் நெருங்குவதில்லை. ஆனால், மக்கள், இந்த முட்டாள் ராஜவை ஒழித்துக் கட்ட யாராவது முன்வரமாட்டார்களா என்று ஏங்கினார்கள்.

அந்த சந்தர்ப்பமும்ஒருநாள் வந்தது. அந்தப் பட்டணத்தில்
ஒரு பெரிய பணக்காரர். அந்தப் பணக்காரர் வீட்டில் திருட நினைத்தான், ஒரு திருடன். அந்தப்பணக்காரார் ஒருநாள் தன் குடும்பத்தோடு வெளியூருக்குக்கிளம்பினார். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று திருடன் பணக்காரர் வீட்டில் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்தான்.

பணக்காரர் பாதுகாப்பாக தங்க நகைகள், காசை எல்லாம் வைத்து இருந்த ஒரு பெரிய இரும்புப் பெட்டியைக் கண்டுபிடித்தும்
விட்டான். ஆனால் என்ன முயன்றும் அந்த இரும்புப் பெட்டியைத் திறக்கமுடியவில்லை. இரும்புப் பெட்டியும்தூக்கிச் செல்லக்கூடியதாக இல்லை. அங்கிருந்த கடப்பாரையின் உதவியால் இரும்புப் பெட்டியைச் சுவர் ஓரமாக நகர்த்தினான். பின்னர் சுவரை இடித்து அந்தத் துவாரம்வழியாக வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்டு இவனும் குதித்தான்.

அப்போது, எதையோ மறந்துவைத்து விட்டுப் போன பொருளை எடுக்க வந்த பணக்காரரிடம் திருடன் வசமாக மாட்டிக் கொண்டான். திருடனைக் கொண்டுபோய் ராஜா முன்னால் நிறுத்தினார், பணக்காரர்.முட்டாள் ராஜா விசாரணையைத் துவக்கினார்.

பணக்காரர் நடந்ததைச் சொன்னார். திருடனுக்குத் தக்க தண்டனை வழங்கவேண்டும் என்றும் பணக்காரர் கேட்டுக் கொண்டார்.

உடனே திருடன், " மக்கள் போற்றும் மகாராஜாவே! நான் எனது நகை வைத்திருந்த இரும்புப் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டேன். மாற்றுச் சாவி போடுவதற்காக எடுத்துப்போனேன். வழியில் பார்த்த வர் என் பணப்பெட்டியை அபகரிக்க எண்ணி இப்படி நாடகமாடுகிறார், என்று அழகாக ஒரு பொய்யைச் சொன்னான் திருடன்.

பணக்காரர் எதோ சொல்ல வாய் திறந்தார். உடனே முட்டாள்
ராஜா, " நீ பேச வேண்டாம். அடுத்தவர் சொத்தை அபகரித்தே நீ பணக்காரனாகிவிட்டாய். யாரங்கே? இந்தப் பணக்காரனைச் சிறையில் தள்ளுங்கள், " என்று உத்திரவிட்டான்.

பணக்காரர் பார்த்தார். ஆயுள் முழுக்க முட்டாள் ராஜா சிறையில் வைத்துவிடுவானே, என்று சமயோசிதமாக ராஜாவிடம் பேசினார். " அண்டைநாடெல்லாம் புகழும் அருமை ராஜாவே!

என்னிடம் இருப்பது போன்ற அதே மாதிரி இரும்புப் பெட்டியை செய்து இவரிடம் விற்ற சாரி தான் இதற்கெல்லாம் காரணம். எனவே தண்டிக்கப்பட்வேண்டியது அந்த இரும்புப் பெட்டியைச் செய்த சாரிதான், ராஜாவே " என்றார் பணக்காரர்.

உடனே ராஜா, " பணக்காரர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. இரும்புப் பெட்டியைச் செய்த சாரியை கூட்டிவரும்படி உத்திரவிட்டான். சாரி வந்ததும்," நீ ஏன் ஒரே மாதிரி இரும்புப் பெட்டியைச் செய்து கொடுத்தாய்? உன்னால் பணக்காரர் ஜெயிலுக்குப் போகவேண்டிய நிலையை உருவாக்கிவிட்டாய்.

இந்தக்குற்றத்திற்கு உனக்கு நான் மரண தண்டனை விதிக்கிறேன்,"என்றார் முட்டாள் ராஜா.சாரி பார்த்தார்.

முட்டாள் ராஜாவிடம் உண்மையைச் சொன்னாலும் எடுபடாது.
தான் தப்பித்தால் போதும் என்று, " ஏழுலகம் புகழும் ராஜாவே!

இந்தத் தவறுக்கு நான் காரணமல்ல. எனது வேலைக்காரன் செய்த தவறு. எனவே என் வேலைக்காரன்தான் தண்டிக்கப்படவேண்டும்," என்றான் சாரி.

" அடடே! அப்படியா! நல்ல வேளை. நான் உன்னைத் தண்டிக்க மாட்டேன். நீபோகலாம். உன் வேலைக்காரனைத் தண்டிக்கிறேன்," என்றார் ராஜா.

வேலைக்காரன் வந்தான்." உன்னால் அநியாயமாக உன் முதலாளியும், பணக்காரரும் சிறைக்குப் போக இருந்தார்கள். ஒரே மாதிரி இரும்புப் பெட்டி செய்து குழப்பத்துக்கு காரணமான உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன்." என்றர் முட்டாள் ராஜா.

வேலைக்காரன் தன் தலையைக் காப்பாற்றிக்கொள்ள அவனும் ஒரு பொய் சொன்னான்.

" ராஜாவுக்கெல்லாம் ராஜாவே! நான் இரும்புப் பெட்டி செய்து கொண்டிருக்கும்போது அந்தவழியாக ஒரு இளம்பெண் வந்தாள்.

அவள் அழகில் மயங்கிவிட்டதால், முதலில்செய்த பெட்டியைப் போலவே இரண்டாவதையும் செய்ய நேர்ந்தது. அந்தப் பெண் என் வேலை நேரத்தில் குறுக்கிடாமலிருந்தால் இந்தத் தவறே நடந்திருக்காது. எனவேதாங்கள் அந்தப் பெண்ணைத்தான் தண்டிக்கவேண்டும்," என்றான் வேலைக்காரன்.

" நல்லவேளை! உன்மையைச் சொன்னாய். உன்மையைச் சொன்னதால் தப்பினாய். நீபோகலாம். அந்தப் பெண்ணைத் தூக்கிலிடுகிறேன்," என்றான் முட்டாள் ராஜா.காவலர்கள் அந்தப் பெண்ணை அழைத்து வந்து ராஜா முன்பாக நிறுத்தினர்.

"சாரியின் வேலையாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது நீ ஏன்? அந்தப்பக்கம் போனாய். உன்னால் எத்தனை விபரீதம் நடந்துவிட்டது தெரியுமா? உன்னைத் தூக்கிலிட்டு இந்த விவகாரத்தை முடிக்கப்போகிறேன்," என்றார் ராஜா. மதி கெட்ட ராஜாவிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மதி நுட்பமாக பதில் சொன்னாள் அந்தப்பெண்.

உலகம் போற்றும் உத்தம ராஜாவே! நான் நாட்டியம் கற்றுக்கொள்ள அந்தவழியாகத்தான் போயாக வேண்டும். நாட்டியம் சொல்லித்தரும் சிரியர் விரைந்து கற்றுக்கொடுக்காமல்காலை, மாலை என்று அடிக்கடி வரச் சொன்னதால் நான் அந்தவழியாகப் போக வேண்டி வந்தது. என்னை நாட்டியம் கற்க அடிக்கடி வரச் சொன்ன நாட்டிய ஆசிரியரைத்தான் நீங்கள் தண்டிக்கவேண்டும்," என்றாள் அந்தப்பெண்.

"அப்படியா! நீ போகலாம். நாட்டிய ஆசிரியர் தான் உண்மைக் குற்றவாளி என்று அறிந்து கொண்டேன், என்று சொன்னராஜா நாட்டிய ஆசிரியரை கைது செய்து கொண்டு வரும்படி உத்திரவிட்டான்.

நாட்டிய ஆசிரியரோ அப்பாவி. அவருக்கு புகார், வழக்கு எதுவும் புரியவில்லை. ராஜாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு புரியலை. மெளனமாக நின்றார். உடனே முட்டாள் ராஜா, இவன்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்துவிட்டேன், என்று கூறி உரக்கச் சிரித்தான்.

நாளை சூரிய உதயத்தின் போது நடன ஆசிரியர் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட உத்திரவிடுகிறேன். இனிமேல் அவன் காரணம். இவன் காரணம், என்றுசொல்லி யாரும் தப்பிக்கமுடியாது என்பதற்கு ந்த வழக்கு உதாரணமாகவும் தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும் இதை நாட்டு மக்களுக்கு சேனாதிபதி அறிவிக்க கட்டளையிடுகிறேன்," என்று முட்டாள் ராஜா மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

நடன ஆசிரியர் மனைவி பக்கத்துவீட்டில் வசிக்கும் வீரசேணன் என்ற வாலிபரிடம் சொல்லி எப்படியாவது தன்கணவரைக் காப்பாற்றவேண்டும் என்று கெஞ்சி அழுதாள்.

வீர சேணன் புத்திசாலி. அழாதீர்கள். முட்டாள் ராஜாவின் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு உங்கள் கணவரை நான் மீட்டு வருகிறேன்," என்று தைரியம்சொன்னான்.

வீர சேணன் தன் நண்பனை அழைத்து தனது திட்டத்தை அவனிடம் சொல்லி, சரியான நேரத்தில் தூக்கு மேடை மைதானத்துக்கு வந்துவிடவேண்டும் என்றுசொல்லி அனுப்பினான்.

தூக்கிலிடும் நேரம் நெருங்க, நெருங்க மக்கள் கூட்டமும் அதிகரித்தது. முட்டாள் ராஜா தனது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தான். இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா? என்று பொதுமக்கள் வேதனையோடு பேசிக்கொண்டனர்.

நாட்டிய ஆசிரியரின் மனைவி சிந்திய மூக்கும் அழுத கண்ணீருமாக அங்கே பார்ப்பவர்கள் மனது கலங்கநின்று கொண்டிருந்தார். அப்போது முட்டாள் ராஜாவின் மெய்க்காப்பாளரோடு யாரோ உரத்த குரலில் சத்தம் போட்டு பேச ராஜா, என்ன சப்தம் அங்கே? என்று கேட்டான்.

தங்களைப் பார்த்தே ஆகவேண்டுமென்று இருவர் தகராறு செய்கிறார்கள். தூக்குத்தண்டனை நிறைவேற்றிய பிறகு ராஜாவை அவையில் சந்திக்கலாம் என்று சொன்னோம். ஆனால் நாட்டிய ஆசிரியருக்குப் பதிலாக தாங்கள் அந்தத் தண்டனையை ஏற்கவேண்டும்.

அதனால் ராஜாவை இப்போதே சந்தித்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கின்றனர்," என்று மெய்காப்பாளர் ராஜாவிடம் தெரிவித்தார். அழைத்து வாருங்கள் என்று வரப்போகும் ஆபத்தை அறியாமல், ராஜா மீசையை நீவிவிட்டுக்கொண்டே ராஜ கம்பீரமாகச் சொன்னார்.

வீரசேணனும் அவனது நண்பனும் ராஜா முன் நிறுத்தப்பட்டனர்.
உடனே சற்றும் தாமதிக்காமல் வீரசேணன், " ராஜனுக்கெல்லாம் ராஜனே! நீதி நெறி தவறாது ஆட்சி நடத்தும் மகாராஜாவே! உன் புகழ் ஓங்குக! நாட்டிய ஆசிரியருக்குப்பதிலாக என்னைத் தூக்கிலிடுங்கள் உங்களுக்குக் கோடிப்புண்ணியம், " என்றான் வீரசேணன்.

உடனே சற்றும் தாமதிக்காமல் வீரசேணனின் நண்பன், " இல்லை மகாராஜா,என்னைத்தான் நீங்கள் தூக்கிலிட வேண்டும் " என்றான்.
ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பயித்தியமா பிடித்திருக்கிறது உங்களுக்கு. தூக்கில் தொங்க நான், நீ என்று போட்டி போடுகிறீர்களே? சரியான மடையர்களாக இருக்கிறீர்களே! " என்றான் ராஜா.

வீரசேணனின் நண்பன்," எக்காரணம் கொண்டும் இவனைத் தூக்கில் போடாதீர்கள். என்னைத் தூக்கில் போடுங்கள், என்றான் ராஜாவிடம். " ஆசையைப் பாரு, நீ ராஜா ஆயிடலாம்னு பாக்குறியா? நான் விடமாட்டேன். ராஜா, என்னைத் தூக்கிலிடுங்கள், என்றான் வீரசேணன் அவசர,அவசரமாக.

ராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. " என்ன உளறுகிறீர்கள்? தூக்கிலிட்டால் ராஜா ஆகிவிடுவீர்களா? புரியும்படி சொல்லாவிட்டால் இப்போதே உங்கள் இருவர் தலையையும் சீவிவிடுவேன், என்றார் ராஜா.

"ராஜா! முக்காலமும் உணர்ந்த மாமுனிவரைச் சந்தித்தோம். அவர்தான் சொன்னார். ராஜாவின் கட்டளையால் யார் இந்த நேரத்தில் தூக்கிலிடப்பட்டு மரணமடைகிறாரோ,அவர் இந்த தேசத்துக்கு அடுத்த ராஜா! அதுமட்டுமல்ல, அந்த ராஜாவுக்கு சாவே கிடையாது, என்று சொன்னார். அதனால்தான் ராஜா ஆகும் ஆசையில் நாங்கள் எங்களைத் தூக்கிலிடும்படி கேட்டோம்," என்றான் வீரசேணன்.

வீரசேணனின் நண்பன் வேகமாக," முனிவர் என்னிடம்தான் முதலில் சொன்னார். எனவே, என்னைத்தான் தூக்கிலிட நீங்கள் கட்டளையிட வேண்டும், என்றான்.

ராஜா கடகடவென சிரித்தான். இதைக் கேட்டபின்னும் உங்களைத் தூக்கிலிட நான் என்ன முட்டாளா? தளபதியே நாட்டிய ஆசிரியருக்குப் பதிலாக என்னைக் காலதாமதமின்றி தூக்கிலிடுங்கள்.

இது ராஜகட்டளை! உடனே நிறைவேறட்டும்..ம்ம்... என்றான் முட்டாள் ராஜா.

அப்புறம் என்ன? ராஜாவின் விருப்பப்படியே ராஜா தூக்கிலிடப்பட்டான். முட்டாள் ராஜாவை சமயோசிதமாக தூக்கிலிட வைத்த வீரசேணனை பொதுமக்கள் அந்த இடத்திலேயே ராஜாவாக்கினர்.

நாட்டிய ஆசிரியரும் அவரின் மனைவியும் வீரசேணனுக்கும் அவனது நண்பனுக்கும் நன்றி தெரிவித்தனர். முட்டாள் ராஜா முட்டாள்தனமாகவே ஒழிந்ததில் அந்தநாட்டு மக்கள் சந்தோஷமாகக் கொண்டாடினர்.

-ஆல்பர்ட், அமெரிக்கா.

<.பெரிய பெரிய ஆசை.....!<>


முன்னொருகாலத்தில் ஏழை விறகுவெட்டி ஒருவன் ருந்தான். காலையில் காட்டுக்கு விறகு வெட்டப்போவான்.

மாலையில் வெட்டிய விறகை விற்க பக்கத்து நகரத்துக்குப் போவான். விறகை விற்றுக் கிடைக்கும் பணத்தில்வீட்டிற்கு  தேவையான பொருள்களை வாங்கிச் செல்வான்.

அவன் மனைவியோ நாக்கு ருசியா சமைச்சுச் சாப்பிட வாங்கிவருவதில்லை என்று சண்டை போடுவாள்.
விறகுவிற்ற காசுக்கு வ்வளவுதான் வாங்க முடிந்தது என்பான். சுள்ளி விறகா வெட்டி வித்தா
இதுதான்கிடைக்கும். அடுத்த வீட்டு வீரன் பாருங்க எவ்வளவு சம்பாதிச்சுட்டு வருகிறார்.
நீங்களும் இருக்கீங்களேஎன்று திட்டுவாள்.

வீரன் நாலுபேரை ஏமாத்திச் சம்பாதிக்கிறான். ன்னைக்கு நல்லா ருக்கலாம். ஒருநாள் இல்லாட்டி
ஒருநாள் வீரன் ஜெயிலுக்குத்தான் போகணும். நமக்கு வயிறார சாப்பாடு கிடைக்குது.
அத வச்சு சந்தோசமாருக்கக் கத்துக்க என்பான், விறகு வெட்டி.

பசியாரச் சாப்பிட்டால் போதுமா? நாம நாலு காசு சம்பாதிச்சு வசதியா வாழவேண்டாமா?
காட்டுல பெரியமரமாப் பாத்து வெட்டி வித்தா நமக்கும் நாலு காசு சேரும் என்பாள்.
எதோ, சுள்ளிவிறகு வெட்டி தினமும் வயித்தைக் கழுவுறதே அந்தப் பெரிய மரங்களால் தான்!
உன் பேச்சைக்கேட்டு பெரிய மரமா வெட்டி வித்தா கொஞ்ச நாளைக்கு நாம நல்லாருக்கலாம்.
அப்புறமா, பெரியமரங்களும்ருக்காது; சுள்ளி வெறகுக்கும் வழி இருக்காது. நாம பட்டினி கிடந்து
சாகவேண்டியதுதான் என்பான்விறகுவெட்டி.

இதைக் கேட்டதும், " நாம உருப்புடாம இருக்கிறதுக்குக் காரணமே இதுதான் என்று அழத்
தொடங்கிவிடுவாள். விறகுவெட்டி மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காக சரிசரி... இனிமே
பெரிய மரமா பாத்து வெட்டுறேன்,என்று சொல்வான். அப்புறம் வழக்கம்போல் சுள்ளிவிறகு
வெட்டிப் போய் விற்று வருவான்.

மனைவி சண்டைபோடுவதும் இவன் சமாதானப்படுத்துவதும் வாடிக்கையாக நடப்பதுதான்.
அன்று விறகுவெட்டி நீண்ட நேரம் காட்டில் அலைந்து திரிந்தும் போதுமான விறகு கிடைக்கவில்லை.
மிகவும்களைத்துப் போய் வீடு திரும்பலாம் என நினைத்தான். அப்போது ஒரு பெரிய மரம் ஒன்றைப்
பார்த்தான். சரி.ன்றாவது மனைவி சொன்னமாதிரி இந்த மரத்தை வெட்டி விற்போம்.

மீன், அது இதுன்னு வாங்கீட்டுப்போவோம் என்று நினைத்துக் கொண்டான். அந்த மரத்தை நெருங்கிக்
கோடாலியை வெட்டுவதற்கு ஓங்கினான்.

" வெட்டாதே! " என்ற சப்தம் கேட்டது. விறகுவெட்டி சுற்றும் முற்றும் பார்த்தான்.
ஒருவரும் இல்லை. மீண்டும்வெட்ட கோடாலியை ஓங்கினான்.

மீண்டும், "வெட்டாதே ! நில்! என்று சத்தம் வந்தது.

விறகுவெட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது, " நான் தான் மரம் பேசுகிறேன்.
என்னை நீ வெட்டாமல்விட்டுவிடு, நான் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்,"
என்றது மரம்.

மரம் பேசியதைக் கேட்டு ஆச்சரியமடைந்தான், விறகுவெட்டி. சரி, இன்று பட்டினி தான் என்று சோர்ந்தும் போனான்.

கவலைப்படாதே! உனக்கு என்ன வேண்டுமோ கேள். நான் தருகிறேன்..... மீண்டும் மரம் பேசியது.

எனக்கு ஒன்றும் வேண்டாம். என் மனைவிக்குத்தான் வசதியா வாழணும்னு ஆசை!
எனக்கு எதுவும் வேண்டாம்.என் மனைவி நச்சரிப்பு இல்லாம இருந்தா அதுவே போதும், என்றான் விறகு வெட்டி.

உன் நல்ல மனசு எனக்கு ரெம்பப் பிடிச்சிருக்கு. நீ விரும்பியது போல எல்லாம் நடக்கும்.
நீ, வீட்டுக்குப் போய்பார்! என்றது மரம்.

விறகு வெட்டி வீட்டிற்குப் போனான். அவன் வீடு இருந்த இடத்தில் பெரிய பங்களா இருந்தது.
வீட்டுக்குவெளியே தயங்கி நின்றான். அப்போது அவன் மனைவி கழுத்து நிறைய நகைகளுடன், பட்டுச் சேலை உடுத்தி வெளியே வந்தாள். மரத்தின் மகிமையை எண்ணி வியந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும்அவனும் பட்டு வேட்டி, மோதிரம் என்று விறகுவெட்டி பணக்காரனாக மாறிப் போனான்.
நடந்ததை மனைவியிடம்சொன்னான். நல்லவேளை, இதையாவது புத்திசாலித்தனமா கேட்டீங்களே
என்று மனைவி சொல்லிச்சந்தோசப் பட்டாள்.

கொஞ்ச நாள் ஆனது.

விறகுவெட்டியின் மனைவிக்கு இந்த வாழ்க்கையும் சலித்துப்போனது.
இந்த ஊர்ல நம்மைப்போல் பணக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லா பணக்காரர்களும் மதிக்கிற மாதிரி
இந்த ஊர் ஜமீன்தாரா ஆகணும்.அப்பத்தான் நம்மை எல்லாரும் மதிப்பாங்க. நீங்க அந்த மரத்திடம் போய் சொல்லி ஜமீன்தாரா ஆக்கச் சொல்லுங்க,என்றாள்.

விறகுவெட்டி மறுத்தான். ஆனால் மனைவியின் பிடிவாதம் வேறுவழியில்லாமல் மரத்திடம் போனான்.

மரம் முன்பாக விறகுவெட்டி போனதுமே, என்ன ஜமீன்தாராகனுமா? என்று கேட்டது.
அது என் மனைவியோட ஆசை, என்றான்.சரி. வீட்டிற்கு போ, என்றது மரம்.

விறகுவெட்டி வீட்டிற்கு திரும்பினான்.

அந்த நாட்டு ராஜா, அவனை ஜமீன்தாராக்கியசெய்தி காத்திருந்தது. கொஞ்ச நாள் சென்ற பின்
ஜமீன்தார் வாழ்க்கையிலும் சலிப்புத் தட்டிப் போக ந்த நாட்டுக்கேராஜா ஆக்கிட மரத்திடம் இன்றே
போய்க் கேளுங்கள் என்றாள் அவன் மனைவி.

அவனும், வேண்டாம் ந்த வாழ்க்கையில் என்ன குறை கண்டாய் என்று சொல்லிப் பார்த்தான்.
அவளின் பிடிவாதம் அவன் மீண்டும் மரத்தின் முன் வந்து நின்றான்.

ராஜாவாக்கிப் பார்க்க ஆசை வந்துவிட்டதா? உன் மனைவிக்கு என்று கேட்டது மரம்.
உன் மனைவியின் ஆசைப்படியேநீ ராஜா ஆவாய்! ஆனால் ஒரு நிபந்தனை. உன் மனைவிக்கு
இந்த ராஜா வாழ்க்கையிலும் சலிப்புத் தட்டி என்றைக்காவது விறகு வெட்டி வாழ்க்கையே மேல் என்று
எப்போது எண்ணினாலும் நீ மறுபடியும் விறகுவெட்டியாகிவிடுவாய் என்று சொல்லிஅனுப்பியது மரம்.
வீட்டுக்கு வந்தான்.

அரண்மனையின் பட்டத்து யானை மாலையுடன் வீட்டு முன் நின்றது. விறகுவெட்டி இப்போது அந்த நாட்டு ராஜா!

ராஜாவாகப் பொறுப்பு ஏற்றதும் இராசாங்க அலுவல் அதிகமாக இருந்தது. அதனால் விறகுவெட்டி ராஜா தனது மனைவியிடம்பேசக்கூட நேரம் இல்லாமல் போனது. பகலில் அமைச்சர்கள், அதிகாரிகள் என்று எந் நேரமும் ஓய்வின்றி இருந்தான். இரவில் நகர்வலம், ஒற்றர்களுடன், படைத்தலைவர்களுடன் ஆலோசனை இப்படியாக ராஜா இரவு எந்த நேரத்தில் வந்து படுப்பார்என்றே தெரியாது.

காலையில் மனைவி எழுந்திருக்கும் முன்பு நீராடி கோட்டை கொத்தளங்களைப் பார்வையிடப் போய்விடுவார், ராஜா.

அதனால் கொஞ்ச நாளில் ராஜ வாழ்க்கையும் விறகுவெட்டியின் மனைவிக்கு வெறுத்துப் போக பேசாமல் "விறகுவெட்டி குடும்ப வாழ்க்கையே மேல்" என்று வாய்விட்டே சொன்னாள்!

அன்று எதிரி நாட்டு மன்னன் படைஎடுத்து வந்து அந்த நாட்டைக் கைப்பற்றினான்.
விறகுவெட்டி தலை தப்பினால் போதும் என்று மனைவியை அழைத்துக் கொண்டு தான் முன்பு
வசித்த ஊருக்கே ஓடி வந்துவிட்டான்.

இப்போது, விறகுவெட்டி காட்டுக்குப் போய் முன்பு போல் விறகு வெட்டி சந்தோசமாக வாழ்க்கை
நடத்தினான்.

அவன்மனைவியும் பேராசையை விட்டுவிட்டு கிடைப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்தப் பழகிக் கொண்டாள்.

நீதி:- தம்பி, தங்கைகளே! நமக்குக் கிடைத்ததை வைத்து சந்தோச‌மாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
உங்களிடம் இருக்கும் வசதி வாய்ப்பை விட கூடுதல் வசதி வாய்ப்பு உள்ளவர்களைப் பார்த்து நமக்கு அவர்களைப் போல இல்லையே என்று ஏங்கக் கூடாது!
உங்களை விட வசதி வாய்ப்புக் குறைந்தவர்களை எண்ணிப் பார்த்து அவர்களைவிட நாம் சந்தோஷமாக
இருக்கிறோமே என்று எண்ணுங்கள். அதே நேரத்தில் காலம் கரைத்துவிட முடியாத கல்வியை நீங்கள்
கருத்தாக கற்றால், பிற்காலம் உங்களுக்கு நற்காலமாய் மலரும்! என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆல்பர்ட்,அமெரிக்கா.

<>அன்பா?,செல்வமா?,அதிட்டமா?<>



கிலன் தன் தாய் தந்தையுடன் அந்த ஊரில் வசித்துவந்தான்.
ஒருநாள் அவன் வீடட்டின் முன் மூன்று பேர்கள் வந்தார்கள்.  வந்தவர்கள் ' உள்ளேவரலாமா ' என்று கேட்டனர்.

அகிலனின் தந்தையோ 'உள்ளே வாருங்கள்' என்றார்.

'நாங்கள் மூவரும் ஒன்றாக உள்ளே வரமுடியாது...யாராவது ஒருவர் தான் உள்ளே வரமுடியும்...என் பெயர் செல்வ‌ம்...இவர் பெயர் அதிட்டம்...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்...எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் செல்வ‌ம் என்பவர்.

இதனிக் கேட்ட அகிலனின் தந்தை வீட்டுக்குள் சென்று மனைவி மகனிடம் இதைச் சொன்னார். சொல்லிவிட்டு தனது கருத்தையும் சொன்னார்.

அதிட்டத்தை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் அதிட்டம் நம் பக்கம் இருந்தால் அதுவே போதும் என்றார்.

ஆனால் அகில‌னோ ...'அப்பா செல்வ‌த்தையே உள்ளே அழைக்கலாம்...நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்...எல்லாவற்றையும்..அதிட்டம் ..உட்பட ...அனைத்தையும் வாங்கலாம்' என்றான்.

ஆனால் அகில‌னின் தாயோ 'அதெல்லாம் எதுவும் வேண்டாம்...அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும் ஒருமனதாக, 'அன்பு உள்ளே வரட்டும்' என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து அதிட்டமும், செல்வ‌மும் கூட உள்ளே நுழைந்தனர். உடன் குமரனின் அம்மா"அன்பை" மட்டும் தானே உள்ளே அழைத்தோம், என்றார்.

அன்பு சொன்னார்,' நீங்கள் செல்வ‌த்தையோ, அதிட்டத்தையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம். ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்கும் இடத்தில் தான் செல்வ‌மும், அதிட்டமும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'

"அன்பு" மட்டும் இருந்தால்..நம் வாழ்வில் அதிட்டமும்,தேவையான செல்வங்களும் தானாகவே வந்துவிடும்.

அன்பே அனைத்தும்...அன்பே முக்கியம் என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?

இதையே வள்ளுவப் பெருந்தகை.....

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்
என்று கூறுகிறார்.

நீதி:- அன்பு ஒன்றுக்குத்தான்  எல்லோரையும் இணைக்கும்,பிணைக்கும் சக்தி உண்டு என்பதை உணரலாம்.

ஆல்பர்ட்,அமெரிக்கா.

<>பொறுமைக்குக் கிடைத்த பரிசு<>


ந்தக் கிராமத்தில் மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். காரணம், இரண்டு மூன்று ஆண்டுகளாக மழை பெய்யவில்லை; அதனால் அங்கு பஞ்சம். பசி பட்டினி என்று அந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

கிராமத்திலுள்ள பெரியவர்கள் தாங்கள் பட்டினி கிடந்து குழந்தைகளுக்கு ஒருவேளை எப்படியாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.  இனி அதற்கும் வழி இல்லை. காடுகளில் காய்ந்து போன கிழங்குகள் கூட கிடைப்பதில்லை.

ஊரில் பெரியவர்கள் கூடினர். குழந்தைகளைப் பட்டினியிலிருந்து எப்படி காப்பது? ஆலோசித்தனர்.  இறுதியாக அந்தக் கிராமப் பெரியவர் சொன்னார்.

பக்கத்துக் கிராமத்தில் வசதியான விவசாயி ஒருவர் இருக்கிறார்.  அவர் நிலத்தில் மட்டும் வற்றாத கிணறுகள் இருக்கிறது. அதனால் விவசாயம் செழிப்பாக நடக்கிறது.  அவரிடம் போய் உதவி கேட்போம். மறுக்காமல் செய்வார் என்று பெரியவர் சொன்னார்.

மறுநாள் கிராமப் பெரியவர்கள் சிலர் போய்  அடுத்த கிராம விவசாயியைச் சந்தித்தனர். அவர்கள் தங்கள் நிலையைச் சொன்னார்கள். அதைக் கேட்ட‌ விவசாயி மனமிரங்கினார்.

உடனடியாக உதவவும் செய்தார். ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மூடை நெல்லும் ஒரு மூடை சோளமும் கொடுத்தார்.  அந்தக் கிராமத்தில் எத்தனை சிறுவர் சிறுமியர் இருக்கிறார்கள் என்ற விபரத்தையும் கேட்டுக்கொண்டார்.

நாள்தோறும் மாலையில் அந்த விவசாயி அந்தக் கிராமத்துக்கு மாட்டுவண்டியில் வருவார். அவரது வேலையாள் ஒரு கூடையை பொது இடத்தில் வைப்பார்.

அந்தக் கிராமத்துச் சிறுவர்கள் சிறுமியர்களை அழைத்து அதிலிருக்கும் தின்பண்டங்களை எடுத்துக்கொள்ளச் செய்வார். எல்லோரும் கிடைக்காமல் போய்விடுமோ என்று அடித்துப் பிடித்து எடுத்துப் போனார்கள். ஒரேஒரு சிறுவன் மட்டும் ஓரமாக ஒதுங்கி நின்று கடைசியாக மீதமிருக்கும் ஒரு
தின்பண்டத்தை எடுத்துப் போவான்.

இதே போல ஒவ்வொரு நாளும் தின்பண்டம் கொண்டு வருவார். அந்தச் சிறுவன் பொறுமையாக நிற்பான். எல்லோரும் எடுத்துக்கொண்டு போன பிறகு மீதமுள்ள ஒரு தின்பண்டத்தை எடுத்துப் போவதை அந்த விவசாயி கவனித்தார்.

மறுநாளும் தின்பண்டங்கள் வந்தது. கூடவே சாக்கு மூட்டைகளில் பூசணிக்காய் கொண்டுவந்தார், விவசாயி. எல்லோரும் ஒரு பூசணிக்காய் எடுத்துப்போகும்படி விவசாயி சொன்னார். வழக்கம்போல சிறுவன் எல்லோரும் எடுத்துச் செல்லும் வரை காத்திருந்தான். ஆனால் கடைசியில் பூசணிக்காய் எதுவும் மிஞ்சவில்லை. சிறுவன் ஏமாற்றத்தோடு காலிச் சாக்குப் பையை பார்த்தான்.

அப்போது விவசாயி, அவனை அழைத்து வண்டியிலிருந்து ஒரு பூசணிக்காயை எடுத்துக் கொடுத்தார். சிறுவனும், "நன்றி அய்யா," என்று சொல்லி வாங்கிப் போனான். வீட்டுக்குப் போனதும், அம்மாவிடம் அந்தப் பூசணிக்காயைக் கொடுத்தான்.  அந்தப் பூசணிக் காயை சமைப்பதற்காக‌ உடைத்துப் பார்த்த போது அதிலிருந்து பொலபொலவென தங்கக்காசுகள் கொட்டியது.  அதைக்கண்டதும் அம்மாவும் பிள்ளையும் ஆச்சர்யப்பட்டார்கள்.

மகனை அழைத்து,"இதிலுள்ள பொற்காசுகளை, அந்த விவசாயி அய்யாவிடம் கொடுத்து வரும்படி அம்மா அனுப்பினாள்.  மகனும் அந்த விவசாயியைப் பார்த்து பொற்காசுகளைக் கொடுத்தான்.  "அய்யா, நீங்கள் கொடுத்த பூசணிக்காயில் இந்தத் தங்கக் காசுகள் இருந்தன.  இது உங்களுக்கு
உரியது என்று சொல்லிக் கொடுத்தான்.

ஏழையாக இருந்தாலும் அந்தச் சிறுவனின் குடும்பத்தின் நேர்மையை எண்ணி மகிழ்ந்தார்,விவசாயி. "தம்பி, அது உனக்காக நான் வைத்த பொற்காசுகள்தான்.

நீ, மற்றவர்களைப் போல இல்லாமல் பொறுமையாக இருந்து தின்பண்டத்தை எடுத்துச் சென்றதைக் கவனித்தேன். அது உன் பொறுமைக்குக் கிடைத்த‌பரிசு! நான் கொடுத்த பரிசு!!

இப்போது உன் நேர்மைக்கு இன்னும் ஒரு பரிசு தரப் போகிறேன். உன் படிப்புக்கு ஆகும் செலவை எல்லாம் நானேதரப்போகிறேன்.  சிறுவனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. வீட்டுக்குப் போய் தாயிடம் விவசாயி சொன்னதையெல்லாம் சொன்னான்.

நீதி:- பொறுமையாக இருந்தால் அதற்குரிய பரிசு கிடைக்கும்! நேர்மையாக இருந்தால் அதைவிடப் பெரிய பரிசு கிடைக்கும் என்று தெரிந்துகொண்டோமா?

- ஆல்பர்ட்,அமெரிக்கா.

புதன், 23 பிப்ரவரி, 2011

<>"பச்சைக்கிளி இளவரசன்"<>

"பச்சைக்கிளி இளவரசன்"

அன்பினிய‌ த‌ம்பி, த‌ங்கைக‌ளே,

ஒவ்வொரு நாட்டிலும் பாட்டி சொன்ன கதை,தாத்தா சொன்ன கதை என்று கை கால் முளைத்து காடுமேடு சுற்றுவதும், இறக்கை முளைத்து வானில் வலம் வருவதுமான கதைகள் உலகெங்கும் சிந்திச் சிதறிக் கிடக்கிறது. அதிலும் இப்போதெல்லாம் புதுப்புது கிரகங்களுக்கே சுற்றுலா சென்றுவரும் அதிவேகக் கற்பனைக் கதைகள் சிறார்களுக்கு உற்சாகம் தருகிறது.

கூட்டுக்குடும்பங்கள் சிதறிய பிறகு கதை சொல்ல முதியோர் இல்லங்களில் தஞ்சமாகிவிட்ட தாத்தாவோ பாட்டியோ இல்லை என்கிற நிலை மெல்ல எட்டிப்பார்க்கிறது. எது எப்படி இருந்தாலும் ஒரு ஊர்ல...முன்பு ஒரு காலத்தில் என்று துவங்கும் கதைகளும் அதனை ஆர்வமாய்க் கேட்க ஒரு சிறுவர் கூட்டமும் இன்னும் உண்டு என்பது மகிழ்வான செய்தி.

அமெரிக்காவில் இப்போதெல்லாம் நூலகங்களில் "கதை நேரம்" என்று ஒன்றை ஏற்படுத்தி புத்தகம் எழுதியவரையே வரவழைத்து "கதை சொல்லல்" நடைபெறுகிறது. பெரிய பெரிய‌ புத்தகக் கடைகள் கூட இந்த ஏற்பாட்டைச் செய்கிறார்கள். இங்கே தாத்தா பாட்டிகளுக்குப் பதிலாக கதையை எழுதிய ஆசிரியரே அந்தக் கதையைக் குறிப்பிட்ட நேரத்தில் சுவாரசியமாகச் சொல்லுகிறார்.

அமெரிக்காவில் Bed time Story" என்பது பெரும்பாலான குடும்பங்களில்

தூங்க மறுத்து அடம்பிடிக்கும் குழந்தையை தூங்கவைக்கும் "தாலாட்டுக் கதைகளாக குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிறது.  இரவு எட்டுமணியா? "அப்பா/அம்மா இப்ப எனக்கு கதை சொல்லும் நேரம்" என்ற அதட்டல்கள் துவங்கும் நேரமாக இருக்கும்.

அப்பாவோ அம்மாவோ கதை சொல்லிக் கேட்க இயலாத குழந்தைகள் ஏக்கம் போக்க துவக்கப்பள்ளிகளில் கதை சொல்லும் நேரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காகவே பள்ளி நிர்வாகம் ஒவ்வொரு மாதத்திற்கும் கதை சொல்லிகளை வரவழைக்கிறார்கள். இந்தக் கதை சொல்லிகள் ஒரு தன்னார்வலராக இருப்பார். அவர் சொந்தமாகவோ அல்லது ஏதேனும் ஒரு சுவாரசியமான கதைப் புத்தகத்தை வாசித்துக் கதை சொல்லுபவராகவோ இருப்பார்.

இதன் அடிப்படைக் காரணம் என்ன? குழந்தைகளுக்கு கதை கேட்ப்பதால் அவர்களின் கற்பனா சக்தி வளருகிறது. அவர்களின் சிந்தனை,செயல் அனைத்திலும் ஒரு புதுவெள்ளம் பாய்கிறது. அவர்களின் எண்ண அதிர்வுகள் எல்லையில்லா வானம் போல் விரிவடைகிறது.

தென் அமெரிக்காவின் வடபுலப் பகுதியில் வலம்வரும் பாரம்பரியமான இந்தக்கதை, சிறார்களுக்கு ஒரு இரசனைமிக்க கதையாக அமையும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. வாய்வழிக்கதையாக நாட்டின்

பல பகுதிகளில் உலவியகதை இது. ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மாற்றங்களுடன் பயணப்பட்ட கதை இது. இதனை நம் தமிழ் இரசனைக்கேற்றவாறு தந்துள்ளேன்.

"பகாரோ வேர்டே" என்ற எசுப்பானியச்(Spanish) சொல்லுக்கு பச்சை(பகாரோ) பறவை(வேர்டே) என்று பொருள். மரத்தடியிலும், வீட்டுத் திண்ணைகளிலும், முற்றங்களிலும்,இரவின் இனிமையான பொழுதுகளில் 5ம் நூற்றாண்டிலிருந்து சொல்லப்பட்ட ஆர்வத்தைக் கிளறும் கதை இது. 5ம் நூற்றாண்டிலிருந்து 15ம்நூற்றாண்டு வரை வாய் வழியாக தொடரப்ப‌ட்ட இந்தக் கதையானது பிரசித்தி பெற்ற கதைகளில் இந்தக் கதை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக விவரிக்கப்பட்ட கதை இது.

இதோ......

இதில் என் பங்கிற்கு நம் தமிழ் கதை சொல்லல் பண்பாட்டை மனதிற்கொண்டு....."பச்சைக் கிளி இளவரசன்"

என்ற தலைப்பின் ஊடாக உலா வருகிறேன்.

தம்பிகளே,தங்கைகளே "பச்சைக்கிளி இளவரசன்" கதையை இனி நீங்கள் சுவைத்துப் படிக்கத் துவங்கலாம்.

மிக்க அன்புடன்,
ஆல்பர்ட் அண்ணா.