புதன், 23 பிப்ரவரி, 2011

<>"பச்சைக்கிளி இளவரசன்"<>

"பச்சைக்கிளி இளவரசன்"

அன்பினிய‌ த‌ம்பி, த‌ங்கைக‌ளே,

ஒவ்வொரு நாட்டிலும் பாட்டி சொன்ன கதை,தாத்தா சொன்ன கதை என்று கை கால் முளைத்து காடுமேடு சுற்றுவதும், இறக்கை முளைத்து வானில் வலம் வருவதுமான கதைகள் உலகெங்கும் சிந்திச் சிதறிக் கிடக்கிறது. அதிலும் இப்போதெல்லாம் புதுப்புது கிரகங்களுக்கே சுற்றுலா சென்றுவரும் அதிவேகக் கற்பனைக் கதைகள் சிறார்களுக்கு உற்சாகம் தருகிறது.

கூட்டுக்குடும்பங்கள் சிதறிய பிறகு கதை சொல்ல முதியோர் இல்லங்களில் தஞ்சமாகிவிட்ட தாத்தாவோ பாட்டியோ இல்லை என்கிற நிலை மெல்ல எட்டிப்பார்க்கிறது. எது எப்படி இருந்தாலும் ஒரு ஊர்ல...முன்பு ஒரு காலத்தில் என்று துவங்கும் கதைகளும் அதனை ஆர்வமாய்க் கேட்க ஒரு சிறுவர் கூட்டமும் இன்னும் உண்டு என்பது மகிழ்வான செய்தி.

அமெரிக்காவில் இப்போதெல்லாம் நூலகங்களில் "கதை நேரம்" என்று ஒன்றை ஏற்படுத்தி புத்தகம் எழுதியவரையே வரவழைத்து "கதை சொல்லல்" நடைபெறுகிறது. பெரிய பெரிய‌ புத்தகக் கடைகள் கூட இந்த ஏற்பாட்டைச் செய்கிறார்கள். இங்கே தாத்தா பாட்டிகளுக்குப் பதிலாக கதையை எழுதிய ஆசிரியரே அந்தக் கதையைக் குறிப்பிட்ட நேரத்தில் சுவாரசியமாகச் சொல்லுகிறார்.

அமெரிக்காவில் Bed time Story" என்பது பெரும்பாலான குடும்பங்களில்

தூங்க மறுத்து அடம்பிடிக்கும் குழந்தையை தூங்கவைக்கும் "தாலாட்டுக் கதைகளாக குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிறது.  இரவு எட்டுமணியா? "அப்பா/அம்மா இப்ப எனக்கு கதை சொல்லும் நேரம்" என்ற அதட்டல்கள் துவங்கும் நேரமாக இருக்கும்.

அப்பாவோ அம்மாவோ கதை சொல்லிக் கேட்க இயலாத குழந்தைகள் ஏக்கம் போக்க துவக்கப்பள்ளிகளில் கதை சொல்லும் நேரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காகவே பள்ளி நிர்வாகம் ஒவ்வொரு மாதத்திற்கும் கதை சொல்லிகளை வரவழைக்கிறார்கள். இந்தக் கதை சொல்லிகள் ஒரு தன்னார்வலராக இருப்பார். அவர் சொந்தமாகவோ அல்லது ஏதேனும் ஒரு சுவாரசியமான கதைப் புத்தகத்தை வாசித்துக் கதை சொல்லுபவராகவோ இருப்பார்.

இதன் அடிப்படைக் காரணம் என்ன? குழந்தைகளுக்கு கதை கேட்ப்பதால் அவர்களின் கற்பனா சக்தி வளருகிறது. அவர்களின் சிந்தனை,செயல் அனைத்திலும் ஒரு புதுவெள்ளம் பாய்கிறது. அவர்களின் எண்ண அதிர்வுகள் எல்லையில்லா வானம் போல் விரிவடைகிறது.

தென் அமெரிக்காவின் வடபுலப் பகுதியில் வலம்வரும் பாரம்பரியமான இந்தக்கதை, சிறார்களுக்கு ஒரு இரசனைமிக்க கதையாக அமையும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. வாய்வழிக்கதையாக நாட்டின்

பல பகுதிகளில் உலவியகதை இது. ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மாற்றங்களுடன் பயணப்பட்ட கதை இது. இதனை நம் தமிழ் இரசனைக்கேற்றவாறு தந்துள்ளேன்.

"பகாரோ வேர்டே" என்ற எசுப்பானியச்(Spanish) சொல்லுக்கு பச்சை(பகாரோ) பறவை(வேர்டே) என்று பொருள். மரத்தடியிலும், வீட்டுத் திண்ணைகளிலும், முற்றங்களிலும்,இரவின் இனிமையான பொழுதுகளில் 5ம் நூற்றாண்டிலிருந்து சொல்லப்பட்ட ஆர்வத்தைக் கிளறும் கதை இது. 5ம் நூற்றாண்டிலிருந்து 15ம்நூற்றாண்டு வரை வாய் வழியாக தொடரப்ப‌ட்ட இந்தக் கதையானது பிரசித்தி பெற்ற கதைகளில் இந்தக் கதை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக விவரிக்கப்பட்ட கதை இது.

இதோ......

இதில் என் பங்கிற்கு நம் தமிழ் கதை சொல்லல் பண்பாட்டை மனதிற்கொண்டு....."பச்சைக் கிளி இளவரசன்"

என்ற தலைப்பின் ஊடாக உலா வருகிறேன்.

தம்பிகளே,தங்கைகளே "பச்சைக்கிளி இளவரசன்" கதையை இனி நீங்கள் சுவைத்துப் படிக்கத் துவங்கலாம்.

மிக்க அன்புடன்,
ஆல்பர்ட் அண்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக