உணவு மழைத் தீவு - 10 :
உணவு மழைத்தீவு அடுத்த சில தினங்களில் வழக்கமான தீவாக மாறியிருந்தது. தீவு மக்களும் குழந்தைகளும் உற்சாகமாக உலா வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட உணவு மழைப் புயல் ஓய்ந்து உற்சாகமாக கடற்கரையோரங்களில் கூடி சந்தோசப் பொழுதுகளில் மூழ்கினர். உணவு மழைத்தீவில் அடுத்த மூன்று நாட்கள் நன்றி நவிலல் விழா! ஒவ்வொரு வருடமும் தங்களின் மூவேளை உணவை எந்தக் கட்டணமும் இல்லாமல் வழங்கும் வானத்திற்கு நன்றி கூறும் விழா! வானதேவனுக்கான விழாவாக வானம் பார்த்து முதல் நாள் விழா! மூன்று வேளையும் தங்கள் உணவோடு தீவுத்திடலில் தீவு மக்கள் அனைவரும் கூடி பாட்டுப்பாடி வானதேவனுக்கு வணக்கம் செய்து உணவுண்பது வழக்கம்! இந்த வருடமும் தீவு மக்கள் கூடிக் கொண்டாடினர்.
இரண்டாவது நாள் தீவு மக்கள் அனைவரும் கடற்கரையில் கூடி பல்வேறு விளையாட்டு, படகு செலுத்தும் போட்டி என்று அமர்க்களமாகக் கொண்டாடினர்.மூன்றாவது நாள் குழந்தைகளை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகளை தீவின் மையத் திடலில் வழங்கினர். தீவின் நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தீவு நிர்வாக அதிகாரி ஒலிபெருக்கியில் புதிய நிர்வாக அதிகாரியாக வர விரும்புபவர்கள் மேடைக்கு வரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அறிவித்தார். நான் நீ என்று போட்டியிட ஒருவரும் இல்லை. ஒரே ஒருவர் மட்டும் மேடை ஏறி,"நான் தீவு நிர்வாக அதிகாரியாக வர விரும்புகிறேன்" என்றார். யாருக்காவது ஆட்சேபனை உண்டா? என்று பழைய நிர்வாக அதிகாரி கேட்க, கூட்டம் இல்லையென்றது. உடனே அவர் நாளை முதல் தீவின் நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்பார் என்றார். ஒருமாலை இல்லை; வாழ்த்தி, பாராட்டிப் பேச ஒருவரும் இல்லை. கர ஒலி மட்டுமே எழுப்பினார்கள். அவ்வளவுதான். தீவின் தேசிய கீதமிசைக்க மூன்றுநாள் விழா முடிவுக்கு வந்தது. கூடிய கூட்டம் மெல்ல, மெல்ல கலையத்துவங்கியது. தீவு மக்கள் தங்கள் இரவு உணவைச் சுவைத்துக்கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தனர். திடீரென்று திரையில் சிவப்பு எழுத்துக்களில் அபாய அறிவிப்பு என்று வந்தபோது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எல்லோரின் கண்களும் தொலைக்காட்சியில் நிலை குத்தி நின்றது.
இன்னும் பொழியும்....!
வெள்ளி, 4 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக